/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொபைல் போன்களில் மூழ்கி விடாமல் அறிவை வளர்க்கும் நாளிதழ் படியுங்கள்
/
மொபைல் போன்களில் மூழ்கி விடாமல் அறிவை வளர்க்கும் நாளிதழ் படியுங்கள்
மொபைல் போன்களில் மூழ்கி விடாமல் அறிவை வளர்க்கும் நாளிதழ் படியுங்கள்
மொபைல் போன்களில் மூழ்கி விடாமல் அறிவை வளர்க்கும் நாளிதழ் படியுங்கள்
ADDED : ஜன 29, 2025 06:18 AM
புதுச்சேரி : ''நாட்டின் வளர்ச்சி மாணவர்களின் அறிவுத் திறன், முயற்சி, உழைப்பு ஆகியவற்றை பொறுத்தே அமைகிறது'' என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
புதுச்சேரி ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடந்த 'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:
தாய்மொழி கல்வி மிகவும் முக்கியம். மாணவர்கள் தாய்மொழியில் படிக்கும்போது அந்த அறிவு அவர்கள் மனதில் பசுமரத்தில் ஆணி அடிப்பது போல பதிந்து விடும். பிரதமர் நரேந்திர மோடி சொல்வதைப் போல, மாணவர்கள் பாட புத்தகங்களைக் கடந்து, உலகியல் அறிவை வளர்த்துக் கொண்டு, வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு செல்ல வேண்டும். அதனால் தான், மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
மாணவர்கள்தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்கிறார்கள். ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், அந்த நாட்டில் உள்ள மாணவர்களின் அறிவுத் திறன், முயற்சி, உழைப்பு இதை பொறுத்து தான் அமைகிறது.
இந்தியா தனது 100வது ராக்கெட்டை இன்று 29ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து ஏவுகிறது என்று சொன்னால், உங்களைப் போன்ற மாணவர்கள், இளைஞர்களின் அறிவுத் திறன்தான் அதற்கு முக்கிய காரணம்.
மாணவர்கள் தான் எதிர்கால இந்தியாவின் விடிவெள்ளிகள். அதனால்தான் 'வளர்ச்சி அடைந்த பாரதம் - 2047' என்ற இலக்கோடு நாட்டை வழிநடத்தி கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர், மாணவர்களுடன் அதிகம் கலந்துரையாடுகிறார்.
மாணவர்கள், இளைஞர்கள் தான் அவர்களுடைய அறிவாலும், உழைப்பாலும், திறமையாலும் பாரத நாட்டை உலக அரங்கில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
தவிர்க்க முடியாமல், இன்றைய மாணவர்கள் மொபைல் போன்களில் அதிகம் மூழ்கிப் போகிறார்கள். மொபைல்போன்களால் பல நன்மை இருக்கிறது. ஆனால், அதில் மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 'தினமலர் - பட்டம்' போன்ற பத்திரிகையை படிக்கும்போது அப்படி ஏற்படுவது இல்லை.
மாணவர்கள் மொபைல்போனில் நேரத்தை வீணாக்குவதை விட்டுவிட்டு, இதுபோன்ற அறிவு சார்ந்த பத்திரிகையை படிக்க வேண்டும். போட்டி நிறைந்த இன்றைய உலகத்தில் மாணவர்கள் உலகளாவிய அறிவைப் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது.
உங்களை சுற்றி உள்ள எல்லா துறைகளைப் பற்றிய அறிவையும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற இங்கே வந்து இருக்கிறீர்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல. நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்காக, உங்களைப் பாராட்டுகிறேன்.
பரிசு பெறுவது மட்டும் முக்கியம் அல்ல. போட்டிகளில் கலந்து கொள்வதே சிறப்பு தான். அதற்காக ஒரு முயற்சியும் பயிற்சியும் தேவைப்படுகிறது. இது போன்ற போட்டிகளில் மாணவர்கள் பங்கு கொண்டால் அது மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும்.
எல்லா குழந்தைகளும் பிறக்கும் போது ஒரு திறமையோடு தான் பிறக்கிறார்கள். அந்த திறமையை கண்டுபிடித்து அதை வளர்க்க வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்களின் கையில் இருக்கிறது. குழந்தைகளிடம் இருக்கும் திறமையை நாம் அடையாளம் கண்டு அதை ஊக்கப்படுத்தும் போது அவர்களுடைய திறமை வைரம் போல் பட்டை தீட்டப்படுகிறது.
இவ்வாறு கவர்னர் பேசினார்.