இளைஞர்கள் கம்ப ராமாயணத்தை படிக்க வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை
இளைஞர்கள் கம்ப ராமாயணத்தை படிக்க வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை
UPDATED : மே 08, 2026 06:31 PM
ADDED : மே 08, 2026 06:12 PM
புதுச்சேரி: இன்றைய இளைஞர்கள் கம்ப ராமாயணத்தை படிக்க வேண்டும் என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
கம்பன் கலையரங்கத்தில் 59ம் ஆண்டு கம்பன் விழா நேற்று துவங்கியது. இதில் பங்கேற்ற கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:
இரண்டாவது முறையாக புதுச்சேரி கம்பன் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. பாரத நாட்டில், ராமாயணத்திற்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம் உண்டு. தமிழில் கம்பன் எழுதிய ராமாயணம் தமிழ் காப்பியங்களில் ஒரு மணிமகுடமாக இருக்கிறது. நான் தமிழ்நாட்டில் படித்து வளர்ந்தவன் என்பதால் கம்ப ராமாயணத்தின் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு.
ஒரு நல்ல ஆட்சி மனிதநேயம் நிறைந்த ஆட்சியாக, சமூக நீதியை நிலை நாட்டும் ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதை கம்பர் பல இடங்களில் புரிய வைத்து இருக்கிறார். அதிகாரம் உடையவர்கள் அடிப்படையில் அறநெறி உடையவர்களாக இருக்க வேண்டும். அதிகாரம் மட்டும் போதாது அதை நியாயத்தோடு, கருணையோடு பயன்படுத்தும் மனப்பக்குவம் வேண்டும் என்பதையும் கம்பர் காட்டுகிறார். மன்னராட்சி காலத்திலேயே, மக்களாட்சிக்கு பொருத்தமான சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கருத்துகளை கம்பர் எடுத்து சொல்லி இருக்கிறார். இந்திய அரசியல் அமைப்பும் அதே சிந்தனைகளை ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளாக நமக்கு தந்து இருக்கிறது.
கம்பர் பெண்மையின் பெருமையை உயர்த்தி பேசுகிறார். சீதையை வெறும் கதாநாயகியாக மட்டும் அல்ல தியாகம், மன உறுதியின் அடையாளமாக காட்டுகிறார். இன்று இந்தியாவில் பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், பாதுகாப்பு, விண்வெளி என்று எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள்.
இன்று நாம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அந்த வளர்ச்சி வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் அல்ல. அது அறம் சார்ந்த வளர்ச்சியாக, ஒட்டு மொத்தமான சமுதாயத்தையும் உள்ளடக்கிய முழுமைக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை கம்பராமாயணத்தின் மூலமாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய இளைஞர்கள் கம்பராமாயணத்தை படிக்க வேண்டும்.
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை கம்பர் கற்றுத் தருகிறார். அவர் சொல்லும் தலைமைப் பண்பு, ஒழுக்கம், தியாகம் போன்றவை இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவையானவை. இந்த சிறப்புகளால் தான் கம்பராமாயணம் காலத்தை கடந்து இன்றும் வாழ்ந்து வருகிறது. நம்முடைய சமுதாயம், முறையாக வளர, கம்பரின் சிந்தனைகளை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும்' என்றார்.
