ADDED : மே 07, 2025 12:51 AM
பாகூர்: பாகூர் அருகே குளவி கொட்டி, படுகாயடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாகூர் அடுத்த குடியிருப்பு பாளையம், சுப்பையா நகரை சேர்ந்தவர் நந்தகோபால், 60; கூலித் தொழிலாளி.
இவரது இரண்டாவது மகள் மங்கையர்கரசி. இவரது கணவர் அதே பகுதியை சேர்ந்த விஜய அமிர்தராஜ். இவர்களின் மகன் அமீர் கவுதம், 14. இவர் வீட்டில் முயல் வளர்த்து வருகிறார்.
முயல்களின் உணவுக்காக தழைகளை, நந்தகோபாலும், அமீர் கவுதமும் கொண்டு வந்து போடுவது வழக்கம்.
நேற்று முன்தினம் இருவரும் குடியிருப்புபாளையம் புறவழிச்சாலை அருகே உள்ள ஒரு தோப்பில் முயலுக்கு தேவையான தழைகளை பறித்து கொண்டிருந்தனர். அப்போது, புதருக்குள் இருந்த குளவிகள் பறந்து வந்து இருவரையும் கொட்டின.
வலியால் துடித்த இருவரும், அருகில் இருந்த ராஜேஷ் என்பவர் வீட்டுக்குள் ஓடி சென்று பதுங்கினர். ராஜேஷ் உடனடியாக இருவரையும், பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
அங்கு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு, நந்தகோபால் கிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமீர் கவுதமுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
