ADDED : ஏப் 08, 2026 06:56 PM

புதுச்சேரி: புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 2வது முறையாக பசுமை ஓட்டு சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்காக, இளம் வயதினர் பணியாற்றும் 15, மகளிர் மட்டும் பணியாற்றும் (பிங்க்) 30, மாற்றுத்திறனாளிகள் மட்டும் பணியாற்றும் 2 ஓட்டுச் சாவடி, மற்றும் தனித்துவமான 3 ஓட்டு சாவடி உள்பட மொத்தம் 1099 ஓட்டு சாவடிகள் மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாக்காளர்களை கவரும் விதமாக, தனித்துவமாக அமைக்கப்படும் ஓட்டு சாவடியான வில்லியனுார் அடுத்த கீழூர் அரசு நடுநிலைப் பள்ளி ஓட்டு சாவடியில், பிரெஞ்சு ஆட்சியரிடமிருந்து புதுச்சேரி விடுதலைக்காக நடந்த ஓட்டெடுப்பை நினைவுகூறும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை பசுமை ஓட்டுச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலை தொடர்ந்து வ.உ.சி. பள்ளியில் இரண்டாவது முறையாக பசுமை ஓட்டு சாவடி அமைக்கப் பட்டுள்ளது.
