ஆரோக்கிய அக்குபஞ்சர் வாக்கிங் ட்ராக்... ரெடி!சுதேசி மில் வனத்தில் பணிகள் தீவிரம்
ஆரோக்கிய அக்குபஞ்சர் வாக்கிங் ட்ராக்... ரெடி!சுதேசி மில் வனத்தில் பணிகள் தீவிரம்
UPDATED : பிப் 03, 2026 04:58 AM
ADDED : பிப் 03, 2026 04:55 AM

புதுச்சேரி: புதுச்சேரி வனத் துறையில் ரெடியாகி வரும் ஆரோக்கிய அக்குபஞ்சர் வாக்கிங் ட்ராக் 91 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. புதுச்சேரி நகரத்தின் இரைச்சலுக்கும், ஓட்டத்துக்கும் நடுவே இன்னும் இயற்கை சுவாசித்துக்கொண்டிருக்கும் ஒரே அடர்ந்த வனம் உண்டென்றால், அது வனத்துறையொட்டியுள்ள சுதேசி மில் வனம் தான்.
நிழல் விரித்த மரங்கள், அவற்றின் கிளைகளில் கீச்சென்று குரல் கொடுக்கும் பறவைகள், புல்வெளிகளில் சஞ்சரிக்கும் சிறிய உயிரினங்கள்— இயற்கை தன் எல்லா கொடைகளையும் அழகாகப் பொழிந்திருக்கிறது இந்த வனத்தில். இந்த இயற்கைச் செல்வத்தை பொதுமக்கள் இன்னும் நெருக்கமாக அனுபவிக்க, சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் 3.75 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு தனித்துவமான வாக்கிங் ட்ராக் அமைக்கப்பட்டுள்ளது.
இது சாதாரண நடைபாதை அல்ல… அக்குபஞ்சர் ஸ்டைலில் கூழாங்கற்கள், கருங்கற்கள் பதிக்கப்பட்ட ஒரு ஆரோக்கியப் பாதை. இந்த பாதையில் கால்வைத்துச் செல்லும் ஒவ்வொரு அடியும் உடலுக்கு சிகிச்சையாக, மனத்திற்கு அமைதியாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் 91 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் மூன்று வாரங்களில் இந்த நடைபாதை முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இதுகுறித்து ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில், “அக்குபஞ்சர் என்பது உடல், மனம், ஆன்மா மூன்றையும் நேர்நிலைக்கு கொண்டு வரும் ஒரு மருத்துவ முறை. அதே அடிப்படையில் இந்த வாக்கிங் ட்ராக் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, நடைபயணம் மேற்கொள்ளும் போது ஒரே நேரத்தில் ஆரோக்கிய சிகிச்சையும் பொதுமக்களுக்கு கிடைக்கும்” என்றனர்.
இதோடு மட்டுமல்ல… இந்த வனப்பகுதியில் 32 சிறிய தங்குமிடங்கள் அமைக்கப்பட உள்ளன. நடைபயணம் முடிந்த பிறகு, இயற்கையின் மடியில் அமர்ந்து காபி, தேநீர் அருந்தி உற்சாகம் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளும் இங்கு தங்கி இயற்கையை முழுமையாக ரசிக்கலாம். மூங்கில் குகைகள், அவற்றில் படர்ந்து வரவேற்கும் கொடிகள்,மூலிகைத் தாவரங்களால் நிரம்பிய பாதைகள், குளிர்ந்த காற்றோடு சேர்ந்து வரும் மண் வாசனை— இனி, காட்டுக்குள் நடைபயணம் செய்ய வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை.
புதுச்சேரிவாசிகள், இந்த இனிய அனுபவத்தை இங்கேயே பெறலாம்.
