/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க சுகாதாரத்துறை ஆலோசனை
/
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க சுகாதாரத்துறை ஆலோசனை
ADDED : அக் 30, 2024 04:42 AM
புதுச்சேரி, : தீபாவளி பண்டிகையில் பட்டாசுகளை பாதுகாப்போடு வெடிக்க சுகாதாரத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
குழந்தைகளை, பட்டாசு அருகே விடக்கூடாது. சிறுவர்கள், பெற்றோர் மேற்பார்வையில், திறந்த வெளியில் பாட்டாசுகள் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது பருத்தி ஆடை அணிந்திருப்பது நல்லது.
கொளுத்திய பட்டாசை திரும்பவும் கொளுத்த முயற்சிக்க வேண்டாம். பட்டாசை கையில் வைத்தோ, துாக்கிப் போட்டு வெடிக்கக்கூடாது. புஸ்வானம் போன்ற பட்டாசுகளை முகத்தை சற்று தள்ளி வைத்து வெடிக்கவும். மத்தாப்புகள் எரிந்து முடிந்ததும், தண்ணீர் வாளியில் போடவும்.
பட்டாசு வெடிக்கும் நேரத்தில் பச்சிளம் குழந்தைகள் வீட்டில் இருந்தால், ஜன்னல் கதவுகளை நன்றாக மூடி வைப்பது நல்லது.
இவ்வளவு பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தும் பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டால் உடனே தீக்காயம் பட்ட இடத்தை குளிர்ந்த நீரால் குறைந்தது 20 நிமிடங்கள் குளிர்வித்தால் வலி, வீக்கம் மற்றும் தழும்பின் அளவு குறையும். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ளலாம். மாறாக தீக்காயத்தில் இங்க், வெண்ணை, இட்லி மாவு மற்றும் தக்காளியை தடவுவதை தவிர்க்கவும்.

