UPDATED : நவ 22, 2026 07:07 PM
ADDED : நவ 22, 2026 07:02 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலியானதை தொடர்ந்து, சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு, முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த வாலிபர் இறந்தார். அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என இறந்தவரின் குடும்பத்தினர் குற்றச்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை ஒருங்கிணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வாலிபர் இறந்த முதலியார்பேட்டை பகுதியில் டெங்கு பாதிப்பு கண்டறியவதற்கான நடவடிக்கையை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
டெங்குவில் இருந்து பொதுமக்கள் தற்காத்து கொள்ள, தங்கள் வீடுகளில் குப்பைகள் சேர்த்து வைக்காமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்திருந்தால் அவற்றை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
வீட்டு வெளி பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும். காலியான பொருட்கள், டயர் உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க பார்த்து கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் சுகாதராத்துறை ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
