புதுச்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல்: சட்டசபைக்கு நடந்து வந்த தி.மு.க எம்.எல்.ஏ.
புதுச்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல்: சட்டசபைக்கு நடந்து வந்த தி.மு.க எம்.எல்.ஏ.
UPDATED : ஆக 31, 2026 08:17 PM
ADDED : ஆக 31, 2026 08:11 PM

புதுச்சேரி: போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தத் தவறிய போலீசாரை கண்டித்து, தி.மு.க., எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் சட்டசபைக்கு நடந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது.
புதுச்சேரி நகரப் பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அன்றாடம் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தகோரி ராஜ்பவன் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன், புதுச்சேரி போக்குவரத்து காவல் துறையினரிடம் மனு அளித்திருந்தார். இருப்பினும், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி சட்டசபையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தியும், காவல் துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் அவர் நேற்று வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டார்.
வைசியாள் வீதியில் உள்ள தனது இல்லத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சட்டசபைக்கு நேற்று அவர் நடந்தே வந்தார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் கூறுகையில், ''சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் புதுச்சேரி அரசு, உள்ளூர் மக்களின் பாதுகாப்பைக் கண்டுகொள்வதில்லை. நகரத்தின் முக்கியச் சந்திப்புகளில் போக்குவரத்து போலீசாரைக் காண முடிவதில்லை; இதனால் நகரம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்துப்போகிறது.
நான் காரில் செல்லுவதை காட்டிலும் நடந்து சென்றாலே சீக்கிரமாக சட்டசபைக்கு போய்விடுவேன். அந்த அளவிற்கு நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் உச்சக்கட்டத்தில் உள்ளது. நகரத்தின் அனைத்து பகுதிகளும் இப்படி தான் மக்கள் கடும் நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இப் பிரச்னையைக் கட்டுப்படுத்தத் தவறிய போக்குவரத்து காவல் துறையைக் கண்டித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சட்டசபைக்கு நடந்து வந்தேன்'' என்றார்.
