/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் நிலத்தில் மின் பாதை அமைக்க ஐகோர்ட் தடை
/
கோவில் நிலத்தில் மின் பாதை அமைக்க ஐகோர்ட் தடை
ADDED : நவ 09, 2024 08:34 AM
புதுச்சேரி : முதலியார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அனுமதியின்றி உயர் மின்னழுத்த பாதை அமைக்க ஐகோர்ட் தடை விதித்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் பரம்பரை தர்மகர்த்தா தேவநாதன் கூறியதாவது;
முதலியார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம், பாகூர் அடுத்த பின்னாச்சிக்குப்பத்தில் உள்ளது. இந்த நிலத்தில், 100 குழி அளவிற்கு, விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழி சாலை பணிக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது.
மீதமுள்ள நிலத்தில், முன்னறிப்பின்றி , அத்துமீறி உள்ளே சென்று மின் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பணிகளை தடுக்க வேண்டி, கலெக்டர் மற்றும் அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். எங்கள் மனுவை, அவசர வழக்காக எடுத்து கொண்ட நீதிபதி சவுந்தர், கோவில் நிலத்தில் மேற்கொண்டு எந்த வித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் கோவில் தரப்பில், வழக்கறிஞர் ராஜகோபாலன் ஆஜரானார். இவ்வாறு அவர் கூறினார்.