தாய்வழி ஜாதி சான்றிதழ் விவகாரத்தில் ஐகோர்ட்... அதிரடி உத்தரவு புதுச்சேரி அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி
தாய்வழி ஜாதி சான்றிதழ் விவகாரத்தில் ஐகோர்ட்... அதிரடி உத்தரவு புதுச்சேரி அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி
ADDED : மே 28, 2026 04:06 AM

புதுச்சேரி அரசால் கடந்த 2000-ம் ஆண்டு வெளியிடப்பட்ட, தந்தையின் பூர்வீகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அரசாணை, பாலினப் பாகுபாடுடையது எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.
இந்த உத்தரவை கடந்த 2023-ல் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. கடந்த 2025 மே மாதத்திலும் உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், தாய்வழி பூர்வீகத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கக் கோரி தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்தத் தீர்ப்புகளை எதிர்த்து புதுச்சேரி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதை காரணம் காட்டியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தைச் சுட்டிக்காட்டியும், தாய்வழிச் சான்றிதழ் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
இதனால் சென்டாக் மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கவிருக்கும் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
இத் தடையை எதிர்த்து எட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமிநாராயணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு வாதாடினார்.
அப்போது புதுச்சேரி அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாய்வழிச் சான்றிதழ் வழக்குகளில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை எதிர்த்து புதுச்சேரி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளதைக் காரணமாகக் காட்டியே, புதுச்சேரி அரசு தற்காலிகமாக இந்தச் சான்றிதழ்களை வழங்கவில்லை என்று வாதாடினார்.
அரசுத் தரப்பு வாதத்தைக் கேட்டு கடும் அதிருப்தியடைந்த நீதிபதிகள், தாய்வழிச் சான்றிதழ் விவகாரத்தில் புதுச்சேரி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாலும், உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் எந்தவித இடைக்காலத் தடையும் விதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைப் புதுச்சேரி அரசு அமல்படுத்தாமல் காலம் கடத்துவது ஏன் என, சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, தாய்வழிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ள அனைவரும் இன்று (28ம்தேதி)தாலுகா அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்; அவர்களுக்குப் புதுச்சேரி அரசு உடனடியாகச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தின் இந்த உடனடி உத்தரவைக் கேட்ட அரசு வழக்கறிஞர், இன்று பக்ரீத் பண்டிகை (விடுமுறை நாள்) என்பதால், சான்றிதழ் வழங்குவதில் நடைமுறை சிக்கல் உள்ளது என்று தெரிவித்தனர்.
இதற்கு உடனடியாகப் நீதிபதிகள், இஸ்லாமியப் பணியாளர்கள் இன்று விடுமுறை எடுத்துக் கொள்ளட்டும். தாலுகா அலுவலகத்தில் இருக்கும் இஸ்லாமியர் அல்லாத பிற பணியாளர்களைக் கொண்டு, மாணவர்களுக்கு இன்றே சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவை மாற்றியமைத்தனர். அத்துடன் இது தொடர்பான ரிப்போர்ட் நாளை 29ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தள்ளி வைத்தனர்.
நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தாய்வழிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலையிலேயே உழவர்கரை தாலுகா அலுவலகங்களில் ஆஜராகத் தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
