போலி மருந்து விவகாரத்தில் சந்தேக வளையத்தில் மாண்புமிகு
போலி மருந்து விவகாரத்தில் சந்தேக வளையத்தில் மாண்புமிகு
ADDED : டிச 14, 2025 05:17 AM
நா டு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள போலி மருந்து மோசடி மாபியாக்கள் பின்னணியில் புதுச்சேரியில் உள்ள ஒரு மாண்புமிகு மீது எழுந்துள்ள சந்தேக வளையம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல மருந்து கம்பெனியான 'சன் பார்மா' நிறுவனத்தின் மருந்துகளை அதே பெயரில் போலியாக தயாரித்து, உத்தரப் பிரதேசத்தில் விற்பனை செய்த வழக்கில், சிக்கிய நபரிடம் நடந்த விசாரணையில், போலி மருந்துகள் புதுச்சேரியில் தயாரிப்பது அம்பலமானது.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை மற்றும் திருபுவனைபாளையத்தில் செயல்பட்ட 'லார்வன்' பார்மா என்ற போலி மருந்து தொழிற்சாலையை ராஜா என்கிற வள்ளியப்பன் 2 ஆண்டுகளாக இயக்கி வந்ததாக சி.பி.சி.ஐ.டி.,விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரையை சேர்ந்த ஒரு தனி நபர் ராஜா 2 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடிக்கு போலி மருந்துகளை தயாரித்து விற்பதற்கு, புதுச்சேரியில் உள்ள ஒரு மாண்புமிகுவை முறையாக கவனித்துள்ளார்.
அதனால், அந்தப் போலிமருந்து தொழிற்சாலை பக்கமே எந்த அதிகாரியும் செல்லவில்லை. இதனால் அந்த மாண்புமிகு மீது சந்தேகவளையம் விழுந்துள்ளது.
