/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடைநிலை ஊழியருக்கு ரூ.106 கோடி சொத்து எப்படி வந்தது?: மாஜி முதல்வர் நாராயணசாமி சரமாரி கேள்வி
/
கடைநிலை ஊழியருக்கு ரூ.106 கோடி சொத்து எப்படி வந்தது?: மாஜி முதல்வர் நாராயணசாமி சரமாரி கேள்வி
கடைநிலை ஊழியருக்கு ரூ.106 கோடி சொத்து எப்படி வந்தது?: மாஜி முதல்வர் நாராயணசாமி சரமாரி கேள்வி
கடைநிலை ஊழியருக்கு ரூ.106 கோடி சொத்து எப்படி வந்தது?: மாஜி முதல்வர் நாராயணசாமி சரமாரி கேள்வி
ADDED : அக் 21, 2024 05:47 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், ரூ.106 கோடிக்கு சொத்துக்கள் வைத்திருக்கும், அரசு கடைநிலை ஊழியருக்கும், அமைச்சர் நமச்சிவாயத்திற்கும் தொடர்புள்ளதாக, முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் ஊழலில் சிக்கி உள்ளனர். முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் மீது நான் ஏற்கனவே குற்றம் சாட்டி உள்ளேன்.
தற்போது பி.சி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் ஊழலில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், சில அரசு ஊழியர்களும் சிக்கியுள்ளனர்.
வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ரவிக்குமார் வீட்டில், கடந்த ஐந்து நாட்களாக சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
அவருடைய பெயரிலும், மனைவி பிரியதர்ஷினி மற்றும் மாமியார் குமுதம் ஆகியோர் பெயரில், வாங்கப்பட்ட ரூ.106 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை, சி.பி.ஐ., எப்.ஐ.ஆரில், குறிப்பிட்டுள்ளது. அவருக்கு பல அமைச்சர்களுடன் தொடர்பு உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில், அவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக இருமுறை சோதனை நடத்தப்பட்டது. இரண்டாம் சோதனையில், அமைச்சர் நமச்சிவாயம், அங்கு சென்று, சோதனை நடத்திய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதிலிருந்து இருவருக்கும் எந்தளவிற்கு தொடர்புள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
மேலும் ரவிக்குமார், சேதராப்பட்டில் தொழிற்சாலை வைத்திருக்கும் ஒருவருக்கு பினாமியாக செயல்பட்டு வருகிறார். கடந்த, ஐந்து நாள் விசாரணையில், சி.பி.ஐ., கண்டறிந்த சொத்துக்களின் மதிப்பு மட்டுமே ரூ.106 கோடி. ஆனால் அவருக்கு பினாமி பெயரில் நிறைய சொத்துகள் உள்ளன.
ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டருக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது. அவருடைய சம்பளம் என்ன... நிதிக்கான ஆதாரம் என்ன... இதன் பின்னணி என்ன... இவர் யாருடைய பினாமி என சி.பி.ஐ., முழுமையாக விசாரிக்க வேண்டும்.
இவரை சி.பி.ஐ., வழக்கில் இருந்த காப்பாற்ற, ஒரு அமைச்சர் சென்னையிலேயே தங்கியுள்ளார். இவர் கடந்த, 2009ல் இருந்து சொத்துக்கள் வாங்க ஆரம்பித்துள்ளார். இவருக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் சொத்துகள் உள்ளன.
அவர் டைரியில், எந்தெந்த அமைச்சருக்கு பணம் கொடுத்திருக்கிறார் என எழுதி வைத்துள்ளார். இதில் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் சி.பி.ஐ., நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புதுச்சேரி அரசு ஏன் அந்த ஊழியர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் ரங்கசாமி அவரை காப்பாற்ற நினைக்கிறாரா? அவரை ஏன் இன்னும் சி.பி.ஐ., கைது செய்யவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

