அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீட்டில் சிக்கல்! பா.ஜ., அதிருப்தியால் தொடரும் இழுபறி
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீட்டில் சிக்கல்! பா.ஜ., அதிருப்தியால் தொடரும் இழுபறி
UPDATED : ஜூலை 20, 2026 09:57 PM
ADDED : ஜூலை 20, 2026 09:54 PM

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி, 68 நாட்களுக்கு பிறகு கவர்னிடம் வழங்கிய அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீட்டு பட்டியல், பா.ஜ.,வின் அதிருப்தி காரணமாக வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியின் 16வது சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம், கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுடன் நடந்தது. இதன் முடிவுகள் கடந்த மே 4ம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி தவிர்த்த மற்ற 4 மாநிலங்களிலும் முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்று அரசு நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
ஆனால், புதுச்சேரியில், வெற்றி பெற்ற தே.ஜ., கூட்டணியில், பதவி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள போட்டா போட்டியால் அமைச்சரவை பொறுப்பேற்பில் இழுபறி நீடித்தது. நீண்ட இழுபறிக்கு பின் கடந்த மே 13ம் தேதி முதல்வராக ரங்கசாமியும், அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் பதவியேற்றனர். ஆனால், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட அ.தி.மு.க.,வை சேர்ந்த அன்பழகன், எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பா.ஜ., - என்.ஆர்.காங்., கட்சியிடையே நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின், 33 நாட்கள் கழித்து கடந்த ஜூன் 17 ம் தேதி என்.ஆர்.காங்., ராஜவேல், சிவக்கொழுந்து, பா.ஜ., ராஜசேகர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அன்றே அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒதுக்கப்படவில்லை. இதனால், அரசின் நிர்வாகம் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் காரணமாக இந்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. மாறாக, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 5 மாதத்திற்கான நிர்வாக செலவினங்களுக்காக கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால், அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதனால், அதற்கு முன்பாக சபாநாயகர் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. சபாநாயகர் பதவிக்கு, பா.ஜ., மற்றும் என்.ஆர்.காங்., கட்சிகளிடையே கடும் போட்டா போட்டி நிலவி வருவதால், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீட்டில் சிக்கல் நிலவி வந்தது.
ஆலோசனை கூட்டம் நீண்ட இழுபறிக்கு பின், சபாநாயகர் பதவி பங்கீட்டில் இரு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்ட நிலையில், முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் நேற்று காலை லோக்நிவாசில் நடந்த 'பத்ம' விருதுகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போதே, அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
கவர்னருடன் சந்திப்பு இந்நிலையில், மாலை 3.27 மணிக்கு மீண்டும் லோக்நிவாசிற்கு சென்ற முதல்வர் ரங்கசாமி, 68 நாட்களுக்கு பிறகு அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலை கவர்னர் ரங்கசாமியிடம் வழங்கினார். தொடர்ந்து மாலை 3.47 மணிக்கு வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு பட்டியலை கவர்னரிடம் வழங்கியுள்ளோம். யார், யாருக்கு என்னென்ன இலாகா என்பது வரும்போது தெரிய வரும் என்றார்.
நமச்சிவாயம் சந்திப்பு இதனால், எந்த நேரத்திலும் அமைச்சர்களுக்கான இலாகா பட்டியல் வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. கவர்னரிடம், முதல்வர் வழங்கிய இலாகா பட்டியலில் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு உள்துறை ஒதுக்கப்படவில்லை என்ற தகவல் கசிந்த நிலையில், நேற்று இரவு 7.15 மணிக்கு திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டிற்கு சென்ற, அமைச்சர் நமச்சிவாயம், அங்கு டென்னீஸ் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த முதல்வர் ரங்கசாமியை தனியாக சந்தித்து 15 நிமிடம் பேசினார். அப்போது, இலாகா ஒதுக்கீட்டில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டு, இரவு 7.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீட்டு பட்டியலில் பா.ஜ., அதிருப்தி கொண்டுள்ளதால், 68 நாட்களுக்கு பிறகு முதல்வர், கவர்னரிடம் வழங்கிய அமைச்சர்களுக்கான இலாகா பட்டியல் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
