குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் ரெயின்போ நகரில் சுகாதார சீர்கேடு
குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் ரெயின்போ நகரில் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 02, 2026 08:33 PM
புதுச்சேரி: ரெயின்போ நகரில் குடிநீர் குழாய் சேதமடைந்து பல மாதங்களாக கழிவுநீருடன் கலந்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
புதுச்சேரி நகரத்தின் முக்கிய பகுதியில் ரெயின்போ நகர் குடியிருப்பு உள்ளது. நகரில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என, பலர் வசித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரெயின்போ நகர் மெயின் ரோடு, ஆதிபராசக்தி கோவில் அருகில் சாலை அடியில் செல்லும் குடிநீர் குழாய் சேதமடைந்து, தண்ணீர் வெளியேறி வருகிறது.
கடந்த 8 மாதங்களாக, பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி செல்வது மட்டும் இல்லாமல், கழிவுநீருடன் கலந்து செல்வதால், குடிநீரை குடிக்கும் மக்களுக்கு வாந்தி, பேதி, வயிற்றுபோக்கு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சிறிய அளவில் மழை பெய்தால் கூட ரெயின்போ நகர் சாலையில் ஆறு போல மழைநீர் ஒடுகிறது. அப்போது, வெளியேறி வரும் குடிநீருடன் மழைநீர், கழிவுநீர் கலந்து செல்கிறது. குடிநீர் வெளியேறி செல்லும் வாய்க்காலில் குப்பைகள் அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இப்பிரச்னையை சரி செய்ய ரெயின்போ குடியிருப்பு சங்கம் சார்பில், பொதுப்பணித் துறையினரிடம் பல முறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை சரி செய்யவில்லை. எனவே, சேதமடைந்த குடிநீர் குழாயை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
