/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் சட்ட விரோத பணி நியமனம் சென்னை ஐகோர்ட் மீண்டும் அதிரடி
/
புதுச்சேரியில் சட்ட விரோத பணி நியமனம் சென்னை ஐகோர்ட் மீண்டும் அதிரடி
புதுச்சேரியில் சட்ட விரோத பணி நியமனம் சென்னை ஐகோர்ட் மீண்டும் அதிரடி
புதுச்சேரியில் சட்ட விரோத பணி நியமனம் சென்னை ஐகோர்ட் மீண்டும் அதிரடி
ADDED : பிப் 17, 2024 11:31 PM
புதுச்சேரி வடிசாராய ஆலையில் கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 53 ஊழியர்களின் மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புதுச்சேரி வடிசாராய ஆலையில், கடந்த 2015ம் ஆண்டில் 53 பல்நோக்கு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த நியமனத்தை எதிர்த்து புதுச்சேரியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் அந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் அவர், 'நான் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். ஆனால், கடந்த 07.12.2015ம் ஆண்டு 53 பல்நோக்கு ஊழியர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக இல்லாமல், புதுச்சேரி வடிசாராய ஆலையில் நியமன விதிகளை மீறி தேர்வு செய்துள்ளனர்.
பின், அவர்களை தினக்கூலி ஊழியர்களாகவும், நிரந்தர ஊழியர்களாகவும் பணி நிரந்தரம் செய்துள்ளனர். இது, சட்டப்படி தவறு. இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கில் புதுச்சேரி தலைமைச் செயலர், வடிசாராய ஆலை மேலாண் இயக்குனர், வேலைவாய்ப்பு துறை இயக்குனர் மற்றும் 53 ஊழியர்களும் சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கின் விசாரண ஐகோர்ட்டில் நடந்து வந்தது.
கடந்தாண்டு ஜூலை மாதம் 12ம் தேதி, நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது இறுதி தீர்ப்பு கூறப்பட்டது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி நியமன விதிமுறைகளை பொதுத்துறை நிறுவனம் காலத்துகேற்ப மாற்றாதது தெளிவாக தெரிகிறது. தினக்கூலி ஊழியர்களை நியமிக்கும்போது, பணி நிரந்தரம் செய்யும்போது வயது, கல்வி தகுதி விஷயங்களில் நியமன விதிகள் பின்பற்றப்படவில்லை.
எனவே, கடந்த 07.12.2015ம் ஆண்டு வடிசாராய ஆலையில் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு நியமனம் சட்டவிரோதமானது. எனவே, புதுச்சேரி தலைமைச் செயலர், இதுதொடர்பாக கடந்த 28.10.2015 அன்று, பணிநியமன அறிவிப்புவெளியிட்டவர் மற்றும் 53 ஊழியர்களை பணி நியமனம் செய்தவர் மீது 12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து பணி நியமனம் செய்யப்பட்ட 53 ஊழியர்களும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கு நீதிபதி மகாதேவன், முகமது சபிக் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, 53 ஊழியர்கள் தொடர்ந்த மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், இந்த ஊழியர்களை கருணை அடிப்படையில் ஊழியர்களாக அமர்த்துவது தொடர்பாக மனு அளித்தால் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுத்து, ஆறு வாரத்திற்குள் அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆஜரானார்.