மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 17 புகார்களுக்கு உடனடி தீர்வு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 17 புகார்களுக்கு உடனடி தீர்வு
UPDATED : மே 02, 2026 06:56 PM
ADDED : மே 02, 2026 06:52 PM

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் துறை சார்பில், மாநிலம் முழுதும் மே 2 ல் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், பொதுமக்கள் அளித்த 35 புகார்களில், 17 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண மே 2 ல் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட அனைத்துப் பிராந்தியங்களிலும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது.
ஒதியன்சாலை போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., ஸ்ருதி யாரகட்டி ஆகியோர் பொது மக்களிடம் புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுத்தனர். காரைக்காலில் சீனியர் எஸ்.பி., லஷ்மி சவுஜன்யா, எஸ்.பி., டேனியல் ராஜ் ஆகியோரும், கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில், எஸ்.பி., பழனிவேல், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., சுபம் சுந்தர் கோஷ் ஆகியோர், பொதுமக்களின் குறைகளை கேட்டனர்.
சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், சீனியர் எஸ்.பி., ராகவ், சைபர் கிரைம் சம்பந்தமான புகார்களையும், புதுச்சேரி தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையங்களில், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா, போக்குவரத்து சம்பந்தமான குறைகளையும் கேட்டறிந்தனர். லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில், எஸ்.பி., வம்சித ரெட்டி, தவளகுப்பம் போலீஸ் நிலையத்தில், எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், மாகேவில் எஸ்.பி., வினய் குமார் கட்ஜ், ஏனாம் போலீஸ் நிலையத்தில், எஸ்.பி.,க்கள்., கொய்யே சிட்டி ராஜு, வரதராஜன் ஆகியோர் பொதுமக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுத்தனர்.
முகாம்களில், 102 பேர் மனுக்களை அளித்தனர். இதில் மூத்த அதிகாரிகளிடம் நேரடியாக அளிக்கப்பட்ட 35 புகார்களில், 17 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அந்தந்த நிலையப் பொறுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
