/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எந்த தொகுதியில் போட்டி மவுனம் கலைப்பாரா முதல்வர்?
/
எந்த தொகுதியில் போட்டி மவுனம் கலைப்பாரா முதல்வர்?
ADDED : அக் 12, 2025 04:29 AM
வரும் தேர்தலில் எந்தத் தொகுதியில் நிற்கப் போகிறார் முதல்வர் ரங்கசாமி என, தெரியாமல் என்.ஆர்.காங்., கட்சியினர் தவித்து வருகின்றனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஏனாம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு, தட்டாஞ்சவடியில் மட்டும் வெற்றி பெற்றார் முதல்வர் ரங்கசாமி. வரும் சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் முதல்வர் நிற்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகாததால் என்.ஆர்.காங்., கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
தேர் தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் முதல்வர் நிற்கும் தொகுதியில் தேர்தல் வேலைகளை தற்போதே துவங்கினால் தான் சுலபமாக வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் கட்சி நிர்வாகிகளிடம் உள்ளது.
கடந்த முறை போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அவர், நிற்பதற்கு ஆர்வம் காட்ட வில்லை. புதிதாக இரண்டு தொகுதிகளில் நிற்பதற்கு தயாராகி வருவதாக அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
எப்போதும் அவரது பேவரைட் தொகுதிகளான கதிர்காமம், இந்திரா நகரில் ஏதாவது ஒன்றில் நிற்பது மற்றும் ஒரு புதிய தொகுதியில் நிற்பது என, அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அவரது கட்சி எம்.எல்.ஏ.,வின் ஒரு தொகுதியில் முதல்வரின் பெயரில் வீடு, வீடாக தீபாவளி பொருட்கள் வழங்கி வரும் கட்சி நிர்வாகி ஒருவர், வரும் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி போட்டியிடுவார் அல்லது நான் தான் நிற்பேன் என கூறி வருவது என்.ஆர்.காங்., கட்சியில் பெரும் குழப்பத்தையும், கட்சி நிர்வாகிகளுக்குள் மோதலையும் ஏற்படுத்தி உள்ளது.
கட்சி தலைவரான ரங்கசாமி இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காணாமல் உள்ளதாலும், அவர் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது தெரியாததாலும், அவரது வழக்கமான மவுனத்தாலும் சொந்தக் கட்சியினர் மட்டுமின்றி எதிர்க்கட்சியினரும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
இதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது. முதல்வர் போட்டியிடும் தொகுதியில் பிரதான கட்சிகள் யாரை நிறுத்தலாம் என, முடிவு செய்வார்கள். இதற்கு விடை தெரியாததால், அவர்களும் எவ்வித தேர்தல் பணிகளையும் துவங்க முடியாமல் திணறி வருகின்றனர். முதல்வர் மவுனம் கலைந்தால் மட்டுமே விடை கிடைக்கும்.