புதுச்சேரியில் 'இண்டி' கூட்டணி உடைந்தது! வி.சி.க., - கம்யூனிஸ்டுகள் தனித்து போட்டி
புதுச்சேரியில் 'இண்டி' கூட்டணி உடைந்தது! வி.சி.க., - கம்யூனிஸ்டுகள் தனித்து போட்டி
ADDED : மார் 25, 2026 06:38 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் வி.சி.க., மற்றும் கம்யூ., கட்சிகள் தனித்து போட்டியிடுவதால், அம்மாநிலத்தில் 'இண்டி' கூட்டணி உடைந்தது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., அடங்கிய தே.ஜ., கூட்டணியும், காங்., - தி.மு.க., - கம்யூ., - வி.சி.க., ஆகிய கட்சிகள் அடங்கிய 'இண்டி' கூட்டணியும் களமிறங்கி உள்ளன.
ஆனால், இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு, வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள் வரை நீடித்து, மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்., -16; தி.மு.க., 14 தொகுதிகளை பங்கீட்டு கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தனக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியை, வி.சி.க.,விற்கு தி.மு.க., ஒதுக்கியது. ஆனால், திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ், பிற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க முன்வரவில்லை.
'மேலும், வி.சி.க., - இ.கம்யூ., கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்த தொகுதிகளில், காங்கிரசும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. 'எனவே, ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்' என தெரிவித்தார்.
இதேபோல, 'இண்டி' கூட்டணியில் உள்ள மா.கம்யூ.,விற்கும் தொகுதி ஒதுக்காததால், முத்தியால்பேட்டை, பாகூர், திருபுவனை, லாஸ்பேட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.
மேலும், இ.கம்யூ., கட்சியினர் தட்டாஞ்சாவடி, உழவர்கரை தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே, உடன்பாடு எட்டியதால், காங்., தொகுதிகளில், மனு தாக்கல் செய்த தன் கட்சி வேட்பாளர்களுக்கு 'ஏ' மற்றும் 'பி' படிவங்களை தி.மு.க., வழங்கவில்லை.
ஆனால், காங்., அப்படி செய்யாமல் அனைவருக்கும் படிவங்களை வழங்கியதால், நேற்று வேட்பு மனு பரிசீலனையில் அவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதன்படி, தி.மு.க., விற்கு ஒதுக்கிய காலாப்பட்டு, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, மங்கலம், திருபுவனை ஆகிய ஐந்து தொகுதிகளில் காங்., வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதிகளில் வாபஸ் பெறாவிட்டால், காங்., - தி.மு.க., வேட்பாளர்களே நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகி உள்ளது.
