இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் சுகாதார காப்பீடு திட்டம் அறிமுகம்
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் சுகாதார காப்பீடு திட்டம் அறிமுகம்
ADDED : மார் 19, 2026 04:32 AM
புதுச்சேரி: இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி அனைத்து மக்களுக்கும் சுகாதார காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாண்டிச்சேரி கோட்ட மூத்த கண்காணிப்பாளர் இனக்கொல்லு காவ்யா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் அஞ்சல் துறை தொலை தொடர்பு அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி அனைத்து மக்களுக்கும் விரைவான வங்கி சேவை மற்றும் நிதி பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, நிதி மற்றும் சமூக பாதுகாப்பின் அங்கமாக, மிக குறைந்த பிரீமியம் கொண்ட மருத்துவ காப்பீடை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், தனி நபர் ஆண்டிற்கு ரூ.2,298 பிரீமியம் செலுத்தி ரூ.20 லட்சம் மருத்துவ காப்பீடு பெற முடியும். இத்திட்டம் இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, நிவா பூபா மற்றும் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து வழங்குகிறது.
மேலும், ஆண்டிற்கு ரூ.548 செலுத்தி, ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு அரசுத்துறை நிறுவனமான நியூ இந்தியா காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து வழங்குகிறது. இவை விபத்தின் மூலம் ஏற்படும் மரணம், பகுதி மற்றும் நிரந்தர ஊனத்திற்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். மேலும், விபத்தின் மூலம் ஏற்படும் மருத்துவ செலவிற்கு ரூ.1 லட்சம் வரை பெற முடியும்.
திட்டங்களில் சேருவதற்கான சிறப்பு முகாம் வரும் 30ம் தேதி வரை பாண்டிச்சேரி கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடக்கிறது. பொதுமக்கள் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகம் மற்றும் தபால்காரரை அணுகி சுகாதார மற்றும் விபத்து காப்பீடு பெற்று கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
