இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் புதுச்சேரி கடல் பகுதியை கண்காணிப்பு
இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் புதுச்சேரி கடல் பகுதியை கண்காணிப்பு
ADDED : ஏப் 14, 2026 08:31 PM
புதுச்சேரி: புதுச்சேரி கடல் பகுதியை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி நல்லவாடு, வீராம்பட்டினம், தேங்காய்திட்டு, வைத்திக்குப்பம், சின்னமுதலியார்சாவடி, காலாப்பட்டு உள்ளிட்ட 18 கடற்கரை மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
இதற்கிடையே, சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் சென்னை - கோடியக்கரை வரையில், நடுக்கடலில் எல்லை தாண்டி வரும் கப்பல்கள், படகுகளை கண்காணிப்பது, மீனவர்கள் தாக்கப்படுவதை கண்காணித்து பாதுகாப்பு அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக, ஹெலிகாப்டர் மற்றும் நவீன ரோந்து கப்பல்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடல் பகுதிகளை கண்காணிக்க சென்னையில் இருந்து நவீன ரோந்து கப்பலில் கடற்படை அதிகாரிகள் நேற்று புதுச்சேரி வந்தனர். காந்தி சிலை கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் தனது ரோந்து கப்பலை நிறுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதனை மொபைலில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.
