ADDED : ஜூன் 30, 2025 03:53 AM

புதுச்சேரி, : தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூ., சார்பில், கிளை மாநாடு பாக்கமுடையான்பட்டு, காரல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடந்தது.
மாநாட்டு கொடியை மூத்த நிர்வாகி நடராஜன் ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் சலீம் மாநாட்டை துவக்கி வைத்தார். தட்டாஞ்சாவடி தொகுதி பொருளாளர் தனஞ்செழியன் தலைமை தாங்கினார். வேலை அறிக்கையை, கிளை செயலாளர் வெங்கடேசன் வாசித்தார்.
எதிர்கால செயல்பாடுகள் குறித்து, மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் பேசினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முருகன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எழிலன், ஹேமலதா, தொகுதி செயலாளர் தென்னரசன் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து, 9 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், கிளை செயலாளராக வெங்கடேசன், துணை செயலாளராக பாஸ்கர், பொருளாளராக சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பாக்கமுடையான்பட்டு பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அடைப்புக்கு உள்ளாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அதை துார்வார வேண்டும். இப்பகுதியில், அரசு அச்சகம், குடிமை பொருள் வழங்கல் துறை, கலால் துறை, அரிசி ஆலை, கட்டட தொழிலாளர்கள் நல வாரியம், பாசிக், பாப்ஸ்கோ ஆகிய அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக, நவீன கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.