புதுச்சேரியில் ரூ.4,750 கோடியில் உள்கட்டமைப்பு திட்டம் திட்ட இயக்குநர் ஷீலா தகவல்
புதுச்சேரியில் ரூ.4,750 கோடியில் உள்கட்டமைப்பு திட்டம் திட்ட இயக்குநர் ஷீலா தகவல்
ADDED : மார் 07, 2026 05:37 AM
புதுச்சேரி: புதுச்சேரி முழுவதும் குடிநீர், துப்புரவு மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.4,750 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;
புதுச்சேரி ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த மெகா திட்டம் புதுச்சேரி மட்டுமின்றி காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளையும் உள்ளடக்கியது. பாகூர் அடுத்த நரம்பையில் 500 கோடி ரூபாய் மதிப்பில், தினசரி 5 கோடி லிட்டர் (50 எம்.எல்.டி) சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
தென்பெண்ணை மற்றும் சங்கராபரணி ஆற்றுப் படுகைகளில் 150 கோடி ரூபாயில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதன் மூலம், பொதுமக்கள் நேரடியாக குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து குடிக்கும் வசதி வரவுள்ளது. காரைக்காலுக்கு 130 கோடியிலும், ஏனாமில் 45 கோடி மற்றும் மாகியில் 30 கோடி ரூபாய் குடிநீர் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர பகுதிகளான முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை மற்றும் ரெயின்போ நகரில் பழைய வடிகால் இணைப்புகளை சீரமைக்க 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய துறைமுகத்தில் இருந்து சுண்ணாம்பாறு மற்றும் முத்தியால்பேட்டை வரை கடற்கரை நடைபாதை விரிவாக்கம் செய்ய 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், 550 கோடி ரூபாயில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பாதாள சாக்கடை விரிவாக்கம், உப்பனாறு கிராண்ட் கெனால் மற்றும் கருவாடிக்குப்பம் வாய்க்கால்களை துார்வாரி சீரமைக்க 200 கோடியில் நான்கு பிராந்தியங்களிலும் சாலைகள் மற்றும் பாலங்களை மேம்படுத்த 560 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் 100 சதவீதம் வடிகால் வசதியை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
