ரூ.2.12 கோடியில் உள்கட்டமைப்பு திட்டங்கள் :புதுச்சேரி பல்கலையில்., திறந்து வைப்பு
ரூ.2.12 கோடியில் உள்கட்டமைப்பு திட்டங்கள் :புதுச்சேரி பல்கலையில்., திறந்து வைப்பு
ADDED : ஏப் 15, 2026 10:32 PM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில் ரூ. 2.12 கோடி உள்கட்டமைப்பு திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.
புதுச்சேரி பல்கலையில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சட்டப் பள்ளிக்கான கல்வி வளாகக் கட்டடம் மற்றும் ஊழியர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கான புதிய உயர் மின்னழுத்த மின் இணைப்பு வசதி ரூ.2.12 கோடியில் ஏற்படுத்தப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது.
சட்டப் பள்ளி பொறுப்பு தலைவர் காசிலிங்கம் வரவேற்றார். துணை வேந்தர் பிரகாஷ் பாபு தலைமை தாங்கினார். கல்விப் பிரிவு இயக்குநர் தரணிக்கரசு, கலாசாரப் பிரிவு இயக்குநர் நடராஜன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
துணைவேந்தர் பிரகாஷ் பாபு பேசுகையில், 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, சட்டப் பள்ளியானது வேறொரு கட்டடத்தில் இயங்கி வந்தது. தற்போது புதிதாக அமைக்கப்பட்ட இந்தச் சிறப்பு வசதி, சட்ட மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ள கற்றல் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சட்டப் பள்ளியானது நாட்டின் சட்டத் துறையில் மிக முக்கியப் பங்காற்றும் ஒரு தலைசிறந்த தேசியச் சொத்தாக உருவெடுக்க வேண்டும். இதேபோல், ஊழியர்களின் குடியிருப்புகளுக்கு தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய 3 கி.மீ. நீளமுள்ள உயர் மின்னழுத்த மின்வட கட்டமைப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
பதிவாளர் குணசேகரன், நிதி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முனைவர் சுபலட்சுமி நன்றி கூறினார்.
