ஏ.ஐ.,பாடத்திட்டத்துடன் இயற்கை நுண்ணறிவை வளர்க்கக்கூடிய விஷயங்களை கற்றுத்தருகிறோம்: அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
ஏ.ஐ.,பாடத்திட்டத்துடன் இயற்கை நுண்ணறிவை வளர்க்கக்கூடிய விஷயங்களை கற்றுத்தருகிறோம்: அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
UPDATED : ஜூலை 25, 2026 05:50 PM
ADDED : ஜூலை 25, 2026 05:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி லுார்து அகாடமி பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்ற தமிழக கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:
விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை கல்வி பாடத்திட்ட கமிட்டியின் தலைவராக நியமித்துள்ளோம். நம்முடைய கடந்த வாரங்களில் கணித பாடத்தை கதைகள் வழியே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து, வெறும் செயற்கை நுண்ணறிவு மட்டுமல்ல, இயற்கை நுண்ணறிவை மாணவர்களுக்கு வளர்ப்பதற்கும் கற்றுக்கொடுக்கப்படும்.
எல்லாரும் ஏ.ஐ.,யை அறிமுகப்படுத்துகின்றனர். நாம் ஒரு படி மேலே போய், ஏ.ஐ.,-யை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். எவ்வாறு ஏ.ஐ., (ப்ராம்ட்) டைப் செய்ய வேண்டும் என்று ஆரம்பிக்கப்போகிறோம்.
ஏற்கனவே இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் பல்லாயிரம் பள்ளிகளில் ஆரம்பித்துவிட்டோம். 3-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் கொடுத்துவிட்டோம். அடுத்தடுத்த வகுப்புகளுக்கு ஏ.ஐ., சேர்த்து இயற்கை நுண்ணறிவை வளர்க்கக்கூடிய விஷயங்களையும் கற்றுத்தருவோம்.
மாநிலம் மற்றும் தேசிய நதிநீர் பிரச்னைகளில் எங்கு பேச வேண்டுமோ, முதல்வர் மட்டும் தான் பேசுவார். வேறு யார் பேசுவதும் அதிகாரப்பூர்வமானது அல்ல. அவர் பேசி, ஆலோசனை செய்து அறிவிப்பார்.
சமீபத்தில் லாக்கப் மரணம் நடந்திருக்கிறது. இதனை நியாயப்படுத்த முடியாது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில் குழந்தைகள் மையக் கல்வி அமலுக்கு வரும். குழந்தைகள் மையக் கல்வி என்பது, இதுவரை இல்லாத வகையில் மாணவர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பெண்ணுரிமை, மண்ணுரிமை, தமிழ்/தமிழர் நலன், பெண்களை மதித்தல், பெற்றோரை மதித்தல் சேர்க்கப்பட்டு, பாடப்புத்தகத்தின் சுமை குறைக்கப்பட்டு மனச்சுமை குறைக்கப்படும். அதற்கான கால அவகாசம் தேவைப்படும். விரைவில் அது முழுமையாக அமல்படுத்தப்படும்.
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே இந்தப் பிரச்னை தீரும். த.வெ.க.,த்தின் நிலைப்பாடு நீட்-க்கு எதிரானதே. போராடும் மாணவர்களுக்கு முழு ஆதரவு, போலீசார் இளைஞர்களை அச்சுறுத்தவோ, வன்முறையில் ஈடுபடவோ கூடாது. மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கிறோம்.
இவ்வாறு அவர், கூறினார்.
