ADDED : பிப் 17, 2024 11:32 PM

புதுச்சேரியில் ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் நடந்து வருகிறது. விபத்துகளில் சிக்கி பலர் உயிரிழக்கின்றனர். பலர் காயமடைகின்றனர்.
புதுச்சேரி சின்னஞ்சிறிய ஊர். 30 ஆயிரம் அரசு ஊழியர்கள், 5000 போலீசார் உள்ளனர். இதுதவிர முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரிந்த நபர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால், சிபாரிசு மூலம் தப்பித்து கொள்கின்றனர்.
போக்குவரத்து பிரச்னை என்பது பெரும் தலைவலியாக மாறி வருகிறது. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் போக்குவரத்துத் துறை சார்பில் பொதுமக்களே போக்குவரத்து விதிமீறல்களை புகைப்படம் எடுத்து போக்குவரத்து துறைக்கு புகார் செய்யும் வகையிலான 'டிராபிக் வியூ' என்ற புதிய செயலியை போக்குவரத்து துறை தயார் செய்துள்ளது.
கடந்த வாரம் நடந்த சாலை பாதுகாப்பு வார விழாவில் இந்த செயலியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். இதில், ஒரே பைக்கில் மூவர் பயணம், மொபைல்போனில் பேசிக் கொண்டு பயணம் செய்தல், எதிர்பக்கத்தில் வாகனம் ஓட்டி வருதல், நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்துதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிச் செல்லுதல் என போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனத்தை புகைப்படம் எடுத்து பொதுமக்கள் புகார் பதிவு செய்யலாம்.
அவ்வாறு பதிவு செய்யப்படும் புகார்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிப்பர் என தெரிவிக்கப்பட்டது. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் அப்லோடு செய்யும் பணிகள் நடந்து வருவதால், ஓரிரு நாட்களில் இந்த மொபைல் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.