மாநில எல்லைகளை கடந்து முதலீடுகள் நகர வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
மாநில எல்லைகளை கடந்து முதலீடுகள் நகர வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
ADDED : செப் 18, 2026 11:41 PM
புதுச்சேரி: தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் தகுந்த காரணமின்றி பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
புதுச்சேரி ஓட்டல் சன்வேயில் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பு தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில், கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:
புதுச்சேரியின் பொருளாதார மற்றும் தொழில் துறை திறன் எல்லைகளை தாண்டியது. மருந்துகள், பொறியியல், வாகன உதிரிபாகங்கள், ரசாயனங்கள், உணவு பதப்படுத்துதல், மின் மற்றும் மின்னணுவியல் மற்றும் பல வளர்ந்து வரும் துறைகளில் நாங்கள் சிறந்து விளங்குகிறோம்.
புதுச்சேரி தொழில் வளர்ச்சிக்கும் முதலீட்டாளர்களுக்கு நிச்சயம், வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான செயல்பாடுகள் தேவை. எனவே அரசு விண்ணப்பங்களை கண்காணித்து, காலதாமதத்திற்கு பொறுப்பேற்கும் வகையில் எளிதாக தொழில் செய்வதை வலுப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு தேவையில்லாத தாமதமும் முதலீட்டுச் செலவை உயர்த்துகிறது.
புதுச்சேரியில் பல தொழில்பேட்டைகளும் நிலங்களும் உள்ளன. சில பிரிவுகள் வெற்றிகரமாக இயங்கி வரும் வேளையில், சில தொழில் நிலங்கள் பயன்படுத்தப்படாமல் அல்லது நீண்டகாலமாக வீணாக கிடைக்கின்றன.
ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் தகுந்த காரணமின்றி பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை மீண்டும் உற்பத்திப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, உண்மையான தொழில்முனைவோருக்குக் கிடைக்கச் செய்ய உரிய வழிமுறைகள் பரிசீலிக்கப்படும்.
புதுச்சேரியில் கற்றறிந்த திறமையான இளைஞர் பட்டாளம் உள்ளது. பலர் வேலை தேடி சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களுக்கு செல்கின்றனர். தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள், செயற்கை நுண்ணறிவு, தரவு சார்ந்த தொழில்கள், ஆராய்ச்சி, மேம்பாடு , சுகாதாரத் தொழில்நுட்பம் போன்ற அறிவு சார்ந்த துறைகளை ஈர்க்கும் திறன் இங்கு உள்ளது.
அடுத்த தொழில்புரட்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது. செயற்கை நுண்ணறிவு, தானியங்கி முறை , ரோபாட்டிக்ஸ், தொழில் 4.0 மற்றும் பசுமைத் தொழில்நுட்பங்கள் தொழில்கள் இயங்கும் முறையை மாற்றி வருகின்றன.
எனவே திறமைகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மாநில எல்லைகளைக் கடந்து பயணிக்கின்றன. முதலீடுகளும் மாநில எல்லைகளை கடந்து நகர வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.
