ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத்தேர்வுக்கான விடைகுறிப்பு வெளியீடு
ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத்தேர்வுக்கான விடைகுறிப்பு வெளியீடு
ADDED : ஆக 24, 2026 03:43 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 நாட்கள் நடந்து வந்த ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வுக்கான விடைகுறிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஒருங்கிணைந்த மேல்நிலை எழுத்தர், புள்ளியியல் ஆய்வாளர், நூலக மற்றும் தகவல் உதவியாளர், கள மேற்பார்வையாளர், வேளாண்மை அலுவலர், வேளாண்மை அலுவலர் (பொறியியல்), வேளாண்மை அலுவலர் (நீரியல் புவியியல்), தொழில்நுட்ப அலுவலர், மேல்நிலை எழுத்தர் ஆகிய 8 பதவிகளில் 327 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
இதற்காக புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 112 மையங்களில் 2-ம் தாள் தேர்வு கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் நடந்தது. 21ம் தேதி நடந்த தேர்வை 2,490 பேரும், 22-ம் தேதி நடந்த தேர்வை 3,449 பேர் எழுதினர். இந்த நிலையில் இறுதி நாளான நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மேல்நிலை எழுத்தர், புள்ளியியல் ஆய்வாளர் உள்பட 8 பணியிடங்களுக்கான முதல் தாள் தேர்வு நடந்தது. பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மேல்நிலை எழுத்தர் பணிக்கான 2-ம் தாள் தேர்வு நடந்தது. இதற்கு 34,094 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 14,312 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
அனைத்து பணிளுக்கான தேர்வு முடிந்த நிலையில், நேற்று இரவு ஆன்சர் கீ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் இன்று காலை 11 மணிக்குள் https://recruitment.py.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிவிக்க வேண்டும். இந்த தகவலை அரசு சார்பு செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
