/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜெ., படத்துடன் போஸ்டர் 3 பா.ஜ.,வினர் 'சஸ்பெண்ட்'
/
ஜெ., படத்துடன் போஸ்டர் 3 பா.ஜ.,வினர் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 06, 2024 12:56 AM
புதுச்சேரி:புதுச்சேரியில் சில நாட்களுக்கு முன், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படங்களுடன், 'வாக்களிப்போம் தாமரைக்கே' என்ற வாசகத்துடன் நகரின் பல இடங்களில் போஸ்டர்களை பா.ஜ.,வினர் ஒட்டி இருந்தனர். இந்த போஸ்டர்களில் பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோரின் படங்களும் இடம் பெற்று இருந்தன.
தொடர்ந்து, பா.ஜ., நிர்வாகி போட்டோவுடன், பல இடங்களில் புதிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த போஸ்டரில், பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் எம்.ஜி.ஆர்., தொப்பி அணிந்திருப்பது போன்ற போட்டோவுடன், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா படங்களும் இடம் பெற்று இருந்தன.
மேலும், 'மீண்டும் மோடி, வேண்டும் மோடி' என்ற வாசகமும் அச்சிடப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா படங்களுடன் பா.ஜ.,வினர் போஸ்டர்கள் ஒட்டியதற்கு தமிழக, புதுச்சேரி அ.தி.மு.க., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்; மலிவு அரசியல் செய்வதாக பா.ஜ.,வை விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டிய பா.ஜ., நிர்வாகிகள் அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, புதுச்சேரி மாநில பா.ஜ., பொதுச்செயலர் மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, தலைமையின் அனுமதியின்றி செயல்பட்ட, விஜயபூபதி, ராக் பெட்ரிக், பாபு ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றனர். மேலும், இவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது' என தெரிவித்துள்ளார்.

