பல கோடி மதிப்புள்ள புறம்போக்கு இடம் கபளீகரம்: விழித்துக் கொள்ளுமா அரசு நிர்வாகம்
பல கோடி மதிப்புள்ள புறம்போக்கு இடம் கபளீகரம்: விழித்துக் கொள்ளுமா அரசு நிர்வாகம்
ADDED : ஏப் 01, 2025 04:08 AM

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஓடை புறம்போக்கு இடத்தை, அரசியல் பின்புலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை அரசு விழித்துக் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
புதுச்சேரியில் பெருகி வரும் வாகனப் பெருக்கத்திற்கு ஏற்ப சாலை விரிவாக்கம் இல்லாததால், நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரி -விழுப்புரம் சாலையில் மூலக்குளம் மூலம் இந்திரா சிக்னல் வரை காலை மற்றும் மாலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்து வருகிறது.
இதனை தவிர்க்க, கடந்த 20 ஆண்டிற்கு முன் அரும்பார்த்தபுரம் ரயில்வே (பழைய) கேட் அருகில் இருந்து ரெட்டியார்பாளையம் ஜான்பால் நகர் வழியாக நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலம் வரை 4.5 கி.மீ., துாரத்திற்கு புறவழி (பைபாஸ்) சாலை அமைக்க அரசு திட்டமிட்டது.
இதற்காக 15 ஆண்டிற்கு முன் அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் முதல் நுாறடிச்சாலை வரை நிலம் கையகப்படுத்தும் பணியை துவங்கியது. பல்வேறு இடையூறுகளை கடந்து நிலம் கையகப்படுத்தியதை தொடர்ந்து, 3 ஆண்டிற்கு முன் ரூ.30 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணி துவங்கியது.
அதில், 28 மீட்டர் அகலம் (91அடி)க்கு செம்மண் நிரப்பி, 22 மீட்டர் (72 அடி) அகலத்திற்கு தார் சாலை சென்டர் மீடியனுடன் அமைக்கப்பட்டது. 95 சதவீத சாலை பணிகள் முடிந்துள்ளது. இச்சாலை முறைப்படி திறக்காவிட்டாலும், மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருவதால், இந்த புறவழிச்சாலை, பிரதான சாலையாக மாறியுள்ளது. இதனால், இந்த சாலையை ஒட்டியுள்ள நிலத்தின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், அரும்பார்த்தபுரம் பாலம் முதல் உழந்தை ஏரி வரை, சாலைக்கும் ரயில்வே பாதைக்கும் இடையே உள்ள அரசு புறம்போக்கு இடங்களை, அரசியல் பின்புலம் கொண்டவர்கள் மெல்ல, மெல்ல ஆக்கிரமித்து வருகின்றனர். அவ்வாறு ஆக்கிரமித்த இடத்தை சிலர் வேலி போட்டு வைத்துள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதியில் மனை வைத்துள்ளவர்களும் தங்கள் இடத்திற்கு எதிரே உள்ள அரசு இடத்தை கபளீகரம் செய்து வருகின்றனர்.
இதே நிலை சென்றால் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் சாலையை ஒட்டியுள்ள இடம் முழுவதும் தனியார் வசமாகிவிடும். அவ்வாறு ஆனால், இந்த புறவழிச்சாலை திட்டத்தின் படி சாலையின் இரு பக்கமும் தலா 2 மீட்டர் அகலப்படுத்துவது மற்றும் ஒரு மீட்டர் அகலத்திற்கு வடிகால் வாய்க்கால் அமைப்பது என்பது முடியாத காரியமாகிவிடும்.
எனவே, அரசு தற்போதே விழித்துக் கொண்டு ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், சாலை விரிவாக்கத்திற்கு மீண்டும் ஒரு பெரும் போராட்டத்தை அரசை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
