UPDATED : அக் 07, 2026 09:17 PM
ADDED : அக் 07, 2026 05:56 PM
ஒருவர் கைது: காரைக்கால், கோட்டுச்சேரி, கழுகுமேடு பகுதியில் உள்ள நீர்தேக்கும் அணை அருகில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு மது போதையில் ஆபாசமாக பேசி, தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர். அவர், பூவம் பகுதியைச் சேர்ந்த உதய பிரகாஷ், 34, என்பது தெரிய வந்தது. அவர் மீது கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
கீழவஞ்சூர் பகுதியில் உள்ள பழைய பாலம் அருகே நேற்று முன்தினம் மதுபோதையில் தகராறு செய்த, கீழையூர் திருப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி, 34, என்பவரை, திருப்பட்டினம் போலீசார் செய்து கைது செய்தனர்.
முதியவர் காயம்: காரைக்கால், திருப்பட்டினம், கீழவாஞ்சூர் - நாகூர் சாலையில் உள்ள போக்குவரத்து சோதனைச் சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னையன்,62, என்பவர், சாலையை கடந்தார்.
அவ்வழியாக வந்த பைக் அவர் மீது மோதியது. படுகாயமடைந்த சின்னையன் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 பேர் படுகாயம்: காரைக்கால் வி.ஒ.சி., கிழக்கு புறவழிச்சாலையில் நேற்று முன்தினம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது பஹீம், 21, என்பவர்,ராயல் என்பீல்டு பைக்கில் வந்தார். அவர், எதிரே டி.வி.எஸ்., பைக்கில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரவீனா, 31, என்பவரின் மீது மோதினார். இருவரும் படு காயமடைந்தனர். அவர்கள், அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து ஏற்படுத்திய முகமது பஹீம் மீது திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுந்தவர் சாவு: காரைக்கால், பிள்ளைத் தெரு வாசல் பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 38. இவர், நேற்று முன்தினம் இரவு வஞ்சியாற்றின் படிக்கட்டில் மதுபோதையில் அமர்ந்திருந்தார்.
எதிர்பாராதவிதமாக அவர், ஆற்றில் தவறி விழுந்தார். உடனிருந்த நண்பர்கள் அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டிற்கு சென்ற சரண்ராஜ் வாந்தி எடுத்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அருந்தியவர் சாவு: காரைக்கால், கோவில்பத்து, ஜிப்மர் வளாகச்சுவர் அருகே உள்ள சாலையோரத்தில், நேற்று முன்தினம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது அன்சாரி, 47, என்பவர் இறந்து கிடந்தார். அவர், அதிக மது அருந்தியதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுந்தவர் சாவு: காரைக்கால், நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 50. இவர், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் தனது வீட்டின் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவரை, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் இறந்தார். நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
