/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் கோவில் நிலம் மோசடி; வழக்கு சப் கலெக்டர் ஜான்சன் சிறையில் அடைப்பு
/
காரைக்கால் கோவில் நிலம் மோசடி; வழக்கு சப் கலெக்டர் ஜான்சன் சிறையில் அடைப்பு
காரைக்கால் கோவில் நிலம் மோசடி; வழக்கு சப் கலெக்டர் ஜான்சன் சிறையில் அடைப்பு
காரைக்கால் கோவில் நிலம் மோசடி; வழக்கு சப் கலெக்டர் ஜான்சன் சிறையில் அடைப்பு
ADDED : அக் 12, 2024 07:25 AM

காரைக்கால் : காரைக்கால் கோவில் நில மோசடி வழக்கில் சப் கலெக்டர் ஜான்சனை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காரைக்கால் மாவட்டம், கோவில்பத்து கிராமத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற பார்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை நிலத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வீடு கட்ட விற்பனை செய்ய உள்ளதாக காரைக்கால் சப் கலெக்டர் ஜான்சன், முன்னாள் கலெக்டர் ஆகியோரின் கையெழுத்துடன் கூடிய அரசாணை சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், அரசு வழங்கும் இலவச எல்.ஜி.ஆர்., மனைப்பட்டா போலி ஆவணம் மூலம் பலரிடம் பணம் பறிக்கப்படுவதாக இந்து முன்னணி நகர தலைவர் ராஜ்குமார், கவர்னர் மற்றும் காரைக்கால் கலெக்டரிடம் மனு அளித்தார்.
இதனிடையே சப் கலெக்டர் ஜான்சன், தனது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மோசடி நடந்ததாக காரைக்கால் போலீசில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் சீனியர் எஸ்.பி., மனிஷ் நேரடி விசாரணை நடத்தினார்.
அதில், கெயில் நிறுவனம் கேட்டுக் கொண்டதன் பேரில் பார்வதீஸ்வரர் கோவில் நிலத்தில் 10 ஏக்கர் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், கெயில் நிறுவனம் தங்களுக்கு 2 ஏக்கர் நிலம் போதும் எனக்கூறி மீதி 8 ஏக்கர் நிலத்தை அரசிடம் ஒப்படைத்தது.
அந்த நிலத்தில், இலவச எல்.ஜி.ஆர்., மனைப்பட்டா வழங்குவதாக கூறி அரசு அதிகாரிகள் உதவியுடன் சில அரசியல் கட்சியினர் போலி ஆவணங்கள் மற்றும் லே-அவுட் உருவாக்கி, 186 மனைப்பட்டா தயார் செய்து 70 மனைகள் தலா ரூ.10 லட்சத்திற்கும், மீதி மனைகள் தலா ரூ.3லட்சம் வீதம் முன்பணம் பெற்றுள்ளது தெரியவந்தது.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து இடைத்தரகர்கள் சிவராமன், திருமலை, போலி லே-அவுட் தயார் செய்த நகராட்சி நில அளவையாளர் ரேணுகாதேவி, போலி ஆவணம் தயார் செய்த டாக்குமென்ட் ரைட்டர் கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான என்.ஆர்.காங்., பிரமுகர் ஜேசிபி ஆனந்த் (எ) ஆனந்தகுமார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நில அளவையாளர் ரேணுகாதேவியை, போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அதில், கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர்களின் உறவினர்களுக்கு விற்க முன்பணம் பெறப்பட்டதும், இந்த நில மோசடி சம்பவம் சப்கலெக்டர் ஜான்சன் தலைமையில் கூட்டு சதி நடந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மதியம் 2:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்த சப் கலெக்டர் ஜான்சனை தனிப்படை போலீசார் அழைத்துச் சென்று, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர்.
பின்னர் ஜான்சனை இரு இடங்கங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்பேரில் நில மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்கள், மொபைல் போன், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை நேற்று பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர் மீது போலி ஆவணம் தயாரித்தல் (பிரிவு 468), மோசடி (பிரிவு-420), அரசு முத்திரையை முறைகேடாக பயன்படுத்தியது (பிரிவு-473) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து, நேற்று மதியம் மாவட்ட குற்றவில் நடுவர் நீதிமன்ற நீதிபதி லிசி முன் ஆஜர்படுத்தினர்.
போலீசார் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி லிசி, சப் கலெக்டர் ஜான்சனை வரும் 25ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில், அவரை காரைக்கால் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
சிவன் கோவில் நிலம் மோசடி வழக்கில் சப் கலெக்டர் ஜான்சன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.