/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிஞ்சு விரல்களால் 'அ'னா 'ஆ'வன்னா எழுதி கல்விகோவிலுக்கு அடியெடுத்து வைத்த மழலையர் 'தினமலர்' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் கரைபுரண்ட உற்சாகம்
/
பிஞ்சு விரல்களால் 'அ'னா 'ஆ'வன்னா எழுதி கல்விகோவிலுக்கு அடியெடுத்து வைத்த மழலையர் 'தினமலர்' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் கரைபுரண்ட உற்சாகம்
பிஞ்சு விரல்களால் 'அ'னா 'ஆ'வன்னா எழுதி கல்விகோவிலுக்கு அடியெடுத்து வைத்த மழலையர் 'தினமலர்' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் கரைபுரண்ட உற்சாகம்
பிஞ்சு விரல்களால் 'அ'னா 'ஆ'வன்னா எழுதி கல்விகோவிலுக்கு அடியெடுத்து வைத்த மழலையர் 'தினமலர்' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் கரைபுரண்ட உற்சாகம்
ADDED : அக் 13, 2024 08:00 AM
புதுச்சேரி : 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர், தங்களது மழலைகளுடன் பங்கேற்று, அவர்கள் கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்க பிள்ளையார் சுழி இட்டனர்.
விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எதை துவங்கினாலும் அதில் வெற்றி நிச்சயம். இந்த பொன்னாளில் கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும் பிஞ்சு குழந்தைகளை, அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி மூலம் 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. இந்தாண்டிற்கான 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி. தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் கோர்க்காடு தி ஸ்காலர் பள்ளி, ஓம்சக்தி மாறன் இன்பரா புராஜெக்ட் நிறுவனம் சார்பில், புதுச்சேரி மறைமலையடிகள் சாலை, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை, லட்சுமி பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள என்.எஸ். போஸ் மகாலில் நேற்று நடந்தது.
காலை 7:00 மணிக்கு சிறப்பு வழிபாட்டுடன் கோலாகலமாக துவங்கிய வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, புதுச்சேரி அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், கோர்க்காடு தி ஸ்காலர் பள்ளி சேர்மன் பழனி, புதுச்சேரி போத்தீஸ் பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று துவக்கி வைத்தனர்.
'அ'னா 'ஆ'வன்னா...
முன் பதிவு செய்த பெற்றோர், தங்களது சுட்டி குழந்தைகளுடன் காலை 6:30 மணி முதலே வரத் துவங்கினர். மழலைகளை தங்களது மடிகளில் அமர வைத்த சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர் முன்னிலையில், தட்டில் பரப்பிய நெல்மணிகளில் இளந்தளிர்களின் விரல்களை பிடித்து தமிழில் அ...ஆ எழுதி அரிச்சுவடியை ஆரம்பித்து வைத்தனர். கல்வியிலும், வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் எனவும் வாழ்த்தினர்.
உணர்ச்சிமயம்
தங்களது வீட்டு குழந்தைகள் முதல் முதலாக அரிச்சுவடி எழுதியதை பார்த்து பரவசமடைந்த பெற்றோர், தத்தா-பாட்டிக்கள், உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் உணர்ச்சிவசப்பட்டனர். அந்த அழகிய தருணத்தை, மொபைல் போனில் படம்பிடித்தும் வீடியோ எடுத்து நினைவு பொக்கிஷமாக பத்திரப்படுத்தினர்.
குட்டீஸ்களுக்கு பரிசு
நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டரை வயது முதல் மூன்றரை வயதுள்ள மழலைகளுக்கு, தி ஸ்காலர் பள்ளியின் புத்தகப்பை, லன்ச் பாக்ஸ் 12 பந்துகள் அடங்கிய செட், சேமிப்பு பழக்கத்தினை கற்றுக்கொடுக்க பொம்மை உண்டியல் உள்ளிட்ட அசத்தலான பரிசுகள் வழங்கப்பட்டன.
சூப்பர் ருசிபால் பலுான்
அரிச்சுவடியை ஆரம்பித்த குழந்தைகளுக்கு வின்னர் டெய்ரி நிறுவனத்தின் சூப்பர் ருசி பால் பலுான்கள் வழங்கப்பட, அவர்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லை. பலுான்களை உயர துாக்கி வீசியும், அங்கு இங்கும் ஆட்டியும் உற்சாகத்தில் குதுகலித்தனர். பலுான்களுக்குள் முகத்தை மறைந்து பெற்றோருக்கு கண்ணாம்பூச்சி காட்டி, கண்சிமிட்ட, பெற்றோர் உள்ளத்தில் பூரிப்பு மழை...
சேர்க்க ஆர்வம்
பங்கேற்ற அனைத்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு காலை உணவாக பொங்கல், பூரி, இட்லி, இடியப்பம், கேசரி, வடை சுடச்சுட வழங்கப்பட்டது.
காலை 9:00 மணியளவில் வித்யாரம்பம் நிகழ்ச்சியை முடித்த கையோடு, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை, பள்ளியில் சேர்க்கவும் ஆர்வம் காட்டினர். பல்வேறு பள்ளிகளுக்கு சென்று சேர்க்கை தொடர்பான விபரங்களை கேட்டறிந்தனர். அத்துடன் பள்ளிகளிலும் குழந்தைகளை சேர்த்தனர்.
பெற்றோர் பாராட்டு
கல்விகோவிலுக்குள் அடியெடுத்து வைக்கவுள்ள தங்களது குழந்தைகளுக்கு சரஸ்வதி தேவியின் அருள் கடாட்சம் முழுமையாக கிடைக்கும் வகையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாக பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளுடன் விடை பெற்றனர்.