/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் திருடிய கிருஷ்ணகிரி வாலிபர்கள் கைது
/
பைக் திருடிய கிருஷ்ணகிரி வாலிபர்கள் கைது
ADDED : ஜன 08, 2024 04:50 AM

புதுச்சேரி: கோரிமேட்டில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 17 பைக்குகள் திருடிய கிருஷ்ணகிரி வாலிபர்கள் மூவரை போலீசார் கைது செய்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் தொடர்ச்சியாக பைக்குகள் திருடுபோயின.
குறிப்பாக வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படும் யமஹா, பல்சர் உள்ளிட்ட விலை உயர்ந்த பைக்குகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தன.எஸ்.பி., பக்தவச்சலம் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மேற்பார்வையில், பைக் திருட்டை கண்டுபிடிக்க சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் பைக் திருட்டு நடந்த இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.நேற்று முன்தினம் போலீசார் சாரம் பகுதியில் ரோந்து சென்றனர்.
நள்ளிரவு நேரத்தில் பைக்கை தள்ளிக் கொண்டு வந்த இருவர் போலீசாரை காண்டதும் தப்பியோட முயன்றனர்.இருவரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்தவேலு, 32; சிவக்குமார், 20, ஆகியோர் என, தெரியவந்தது.
தன்னுடைய மற்றொரு கூட்டாளியான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மணிகண்டன், 32; ஆகிய மூவரும், புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தனியார் பேக்கரியில் கடந்த 3 மாதங்களாக தங்கி பேக்கரி மாஸ்டர்களாக வேலை செய்து வந்தனர். பகல் நேரத்தில் பேக்கரியில் வேலை செய்யும் மூவரும், நள்ளிரவு நேரத்தில் நகர பகுதிக்கு சென்று விலை உயர்ந்த 17 பைக்குகளை திருடியது தெரியவந்தது.அதில், 6 பைக்குகளை புதுச்சேரியில் இருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்துார் பகுதிக்கு கொண்டு சென்று தனது குடும்பத்தினர், நண்பர்களிடம் கொடுத்து வைத்திருந்தனர். மீதமுள்ள 11 பைக்குகள், புதுச்சேரி பஸ் நிலையம், ரயில் நிலைய பைக் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் ஏழு யமாகா ஆர்.எக்ஸ்-100, இரண்டு யமாகா ஆர்-1 5,நான்கு ஸ்பிலெண்டர் பைக், இரண்டு டியோ ஸ்கூட்டர், 2 பல்சர் என, ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 17 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி நேற்று காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.