UPDATED : அக் 13, 2026 01:50 AM
ADDED : அக் 13, 2026 01:48 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், வழக்கறிஞர் கொலை முயற்சி வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர் தங்கவிக்ரம், 42; வழக்கறிஞரான இவர், கடந்த 9ம் தேதி காலை நடைப்பயிற்சி சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. படுகாயமடைந்த தங்கவிக்ரம், தஞ்சை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து முக்கிய குற்றவாளியான ஈஸ்வரன் (எ) ஜம்புலிங்கம்,46; அவரது மனைவி நிலவழகி, 42; திருப்பூர் ரமணன் (எ) ஸ்ரீமன்நாராயணன்,32; ஆகிய மூவரை கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில், மதுரையில் தங்கியிருந்த திருப்பூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அடுத்த காட்டுவளவை சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன்,22; கே.செட்டிப்பாளையம் முருகன் மகன் தமிழ் (எ) தமிழரசன்,27; ஆகிய இருவரை தனிப் படை போலீசார் கைது செய்து, நேற்று காட்டுமன்னார்கோவில் போலீசில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிடிபட்ட இருவரும் கூறுகையில், ஜம்புலிங்கம் எங்களுக்கு ஜி–பேவில் ரூ.1,500 பணம் அனுப்பி ஊருக்கு வரச் சொன்னார்.
நாங்கள் வந்ததும், எங்களிடம் கத்தியை கொடுத்து, நான் அடையாளம் காட்டும் நபரை வெட்டி சாய்க்க வேண்டும் என கூறினார். அதன்படி 9ம் தேதி ஜம்புலிங்கம் அடையாளம் காட்டிய நபரை வெட்டிவிட்டு தப்பி சென்றதாக தெரிவித்துள்ளனர்.
