/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை சட்டசபையில் சட்டம் நிறைவேறியது
/
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை சட்டசபையில் சட்டம் நிறைவேறியது
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை சட்டசபையில் சட்டம் நிறைவேறியது
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை சட்டசபையில் சட்டம் நிறைவேறியது
ADDED : பிப் 23, 2024 03:35 AM
புதுச்சேரி: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை துவக்குவதற்கு ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதா புதுச்சேரி சட்டசபையில் நிறைவேறியது.
சட்டசபையில் நேற்று, புதுச்சேரி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (தொழில் தொடங்குவதற்கு ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்கு அளித்தல்) சட்ட முன்வரைவை, அமைச்சர் நமச்சிவாயம் அறிமுகப்படுத்தினார்.
அப்போது நடந்த விவாதம்:
எதிர்கட்சித் தலைவர் சிவா: இந்த சட்ட முன்வரைவை எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்கூட்டியே வழங்கி இருக்க வேண்டும். இதன்மீது விவாதம் நடத்திய பின் அனுமதி வழங்க வேண்டும்.
சபாநாயகர் செல்வம்: ஏற்கனவே சட்டசபையில் இதுகுறித்து விரிவாக பேசியுள்ளோம். அதனடிப்படையில் தான் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் சிவா: இவ்வளவு அவசரமாக சட்ட முன்வரைவை கொண்டு வருவதற்கு என்ன காரணம்? எத்தகைய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப் போகிறீர்கள்? பிற மாநிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப் போகிறீர்களா?
ஏற்கனவே நமது மாநிலத்திலிருந்து பல தொழிற்சாலைகள் வெளியேறி வருகின்றன. இதனால், நிலம் வழங்குவதில் சலுகை அறிவிக்க வேண்டும், தொழிற்சாலைகளுக்கு 3 மாதத்தில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என கூறினோம். புதிய சலுகைகளை அறிவியுங்கள் என சொல்கிறோம்.
இதையெல்லாம் நிறைவேற்றவில்லை. காற்றை மாசுபடுத்தும், நிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப் போகிறீர்களா?
அமைச்சர் நமச்சிவாயம்: ஏற்கனவே சபையில் உறுதிமொழி தந்துள்ளோம். அதன்படி, சட்ட முன்வரைவை கொண்டு வந்துள்ளோம். இது சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் விண்ணப்பித்துவிட்டு தொழிலை தொடங்கலாம். 3 ஆண்டுக்குள் அவர்கள் அரசின் அனுமதியை பெறலாம். இது, பெரிய தொழிற்சாலைகளுக்கு பொருந்தாது. இந்த சட்டம் ஏற்கனவே பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.
எதிர்கட்சி தலைவர் சிவா: கடந்த இரண்டரை ஆண்டுகளில் எத்தனை தொழிற்சாலைகள் புதுச்சேரி விட்டு வெளியேறியுள்ளது? எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது? மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்க போகிறீர்களா?
அமைச்சர் நமச்சிவாயம்: புதிய தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வந்துள்ளன. அந்த பட்டியலை தர தயாராக உள்ளோம்.
நேரு: நகரத்தில் குடிநீர் பிரச்னை உள்ள நிலையில், நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தக் கூடாது. மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி தரப் போகிறீர்களா? இந்த விஷயத்தில் விவாதம் நடத்த வேண்டும்.
சபாநாயகர் செல்வம்: நிலத்தடி நீரை எடுக்கும் எந்த தொழிற்சாலைகளும் வராது. அனுமதி தர மாட்டார்கள். தொடர்ந்து, சட்ட முன்வரைவு குரல் ஓட்டெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டது.