/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் விரைவில் கால்நடைகள் கணக்கெடுப்பு: ஆடு, கோழிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
/
புதுச்சேரியில் விரைவில் கால்நடைகள் கணக்கெடுப்பு: ஆடு, கோழிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
புதுச்சேரியில் விரைவில் கால்நடைகள் கணக்கெடுப்பு: ஆடு, கோழிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
புதுச்சேரியில் விரைவில் கால்நடைகள் கணக்கெடுப்பு: ஆடு, கோழிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : அக் 04, 2024 03:25 AM

புதுச்சேரி, அக். 4- புதுச்சேரியில் 21-வது கால்நடைகள் கணக்கெடுப்பு விரைவில் துவங்க உள்ளது.
மத்திய அரசின் விவசா யம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கால்நடை கணக்கெடுப்பை இந்தியா முழுதும் நடத்துகிறது.
மத்திய மற்றும் மாநில அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த திட்டங் களை சிறப்பான முறையில் தயாரிக்கவும், செயல்படுத்தவும், இத்துறையின் திட்டங்களை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு செய்யவும், கால்நடை புள்ளி விபரங்கள் தேவைப்படுவதால் இந்த கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
அதன்படி, புதுச்சேரி யில் கால்நடை கணக்கெடுப்பு அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலம் விரைவில் நடத்தப்பட உள்ளது.
இத்துறை மூலம் கால்நடை உதவியாளர்கள் மற்றும் புள்ளிவிவரத் துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
மூன்று மாதங்களுக்கு இந்த கணக்கெடுப்பு பணி நடக்கும். குத்து மதிப்பாக இல்லாமல் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று நவீன செயலி வாயிலாக கால்நடைகளை கணக்கெடுப்பு செய்து பதிவு செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கால்நடை துறை முழு வீச்சில் செய்து வருகிறது.
புதுச்சேரியை பொருத்தவரை கடந்த 2019ம் ஆண்டு கால்நடை கணக் கெடுப்பின்போது மொத்தம் 1,51,368 கால்நடைகள் இருப்பது கண்டறியப் பட்டது. 71,984 மாட்டினங்கள், எருமைகள் - 2,395, செம்மறியாடு - 2,445, ஆடுகள் - 73,630, பன்றி-880, குதிரைகள் - 18, போனி - 11, கழுதைகள்-4 இடம் பெற்றிருந்தது.
இது தவிர 17,337 நாய்கள்,1,371 முயல்கள் இருப்பதும் பதிவானது. கோழி இனங்களை பொருத்தவரை 2,35,999 கணக்கெடுப்பில் பதிவானது. கடந்த மூன்று ஆண்டுகளில் கால்நடை துறை மூலம் அதிக அளவில் ஆடுகள், கோழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எனவே ஆடு, கோழிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
கணக்கெடுப்பு குறித்து கால்நடை துறை அதிகாரிகள் கூறியதாவது:
உணவு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, ஜி.டி.பி., போன்றவற்றில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகளவில் 11.5 சதவீத கால்நடைகள் இந்தியாவில் உள்ளன.
அதன்படி, பால் உற்பத்தியில் முதன்மையாகவும், முட்டை உற்பத்தியில் இரண்டாவதாகவும், இறைச்சி உற்பத்தியில் 5-வது இடத்திலும் இந்தியா இருக்கிறது. பால் உற்பத்தி 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
கால்நடைதரவுகளைக் கொண்டே, பட்ஜெட்டிலும், கொள்கை உருவாக்கத்திலும் கால்நடை வளர்ப்புக்கு தேவையானவற்றை இடம்பெறச் செய்ய முடியும்.
எனவே நாட்டின் 21-வது கால்நடை கணக்கெடுப்பில் எந்தவித குளறுபடியும் இல்லாதவகையில் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முறை, கால்நடை கணக்கெடுப்பு மாநிலத்தின் அனைத்துப்பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. இதில் 110 கணக்கீட்டாளர்கள் ஈடுபட உள்ளனர்.
கணக்கெடுப்பின்போது, விவசாயிகள் ஈட்டும் வருமானம் குறித்த தகவல்களும் சேகரிக்கப்படும். இந்த ஆண்டு முதல் கால்நடைகளுடன் பல்வேறு பகுதிகளுக்கு பயணிப்போர் விவரமும் சேகரிக்கப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் வீடு தேடி வரும் கால்நடை மற்றும் புள்ளிவிவரத்துறை அலுவலர்களிடம் தேவைப்படும் அனைத்து விபரங்களையும் அளித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.