தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கும் ல.ஜ.க.,வின் ஜோஸ் சார்லஸ்

 பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கும் ல.ஜ.க.,வின் ஜோஸ் சார்லஸ்

 பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கும் ல.ஜ.க.,வின் ஜோஸ் சார்லஸ்


ADDED : பிப் 12, 2026 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்திய லட்சிய ஜனநாயக கட்சி, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், திடீரென புதுச்சேரி அரசியலில் ஆர்வம் காட்ட துவங்கினார்.

புதுச்சேரியில் தொகுதிதோறும் ஜெ.சி.எம்., என, தனது பெயரில் மன்றங்களை துவங்கி நலத்திட்டங்களை வழங்கினார். காமராஜ் நகர், முதலியார்பேட்டை மற்றும் பாகூர் தொகுதிகளில் தினசரி உணவு வழங்கி வருகிறார்.

குடிநீர், சாலை உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளுக்காக அரசுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தினார். மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இவருக்கு ஆதரவாக மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து, 'லட்சிய ஜனநாயக கட்சி' என்ற கட்சியை துவங்கிய அவர், பிற கட்சி பிரமுகர்களை தனது கட்சியில் சேர்த்தார்.

மேலும், வரும் சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், பா.ஜ., போட்டியிடாத 15 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு இருந்தார். இவரது செயல்பாடு, ஆளும்கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொங்கலுக்கு முன் அவசரமாக தனது தந்தையுடன் டில்லி சென்ற ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.

புதுச்சேரிக்கு திரும்பிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், திடீரென சட்டசபை வளாகத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். தற்போது, அரசை விமர்சிப்பதை தவிர்த்து வருகிறார்.

இதையடுத்து, வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

அதை உறுதி செய்யும் விதமாக, வரும் மார்ச் 1ல், புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழா மேடையில், கூட்டணி கட்சி தலைவர்களில் ஒருவராக ஜோஸ் சார்லசும் மேடையேறுவார் என கூறப்படுகிறது.

ஐ.ஜே.கே.,வில் இருந்து லீமாரோஸ் மார்ட்டின் விலகல்

இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலர் லீமாரோஸ் மார்ட்டின், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:

கடந்த 2012- முதல், இந்திய ஜனநாயக கட்சியில், அர்ப்பணிப்போடு பயணித்து வந்தேன். அக்கட்சியில், 2019ம் ஆண்டு முதல், இணை பொதுச் செயலராக இருந்தேன். எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், கட்சியை தமிழகம் முழுதும் வளர்த்தேன். மக்கள் நலப் பணிக்காக, தமிழகத்தில் நான் செல்லாத கிராமமே இல்லை.

நேரம் காலம் பார்க்காமல் உழைத்த எனக்கு, கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. தொண்டர்களை விட்டு பிரிய மனமில்லாமல், எனது அதிருப்தியை வெளிப்படுத்தினேன். எட்டு மாதம் கடந்த பின்பும், கட்சி தலைமையில் இருந்து, எந்த பதிலும் வரவில்லை. அதையடுத்து, ஐ.ஜே.கே.,வில் இருந்து விலக முடிவெடுத்தேன். ஆனாலும், எனது அரசியல் பயணம், மக்கள் சேவை தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பிரபல லாட்டரி தொழில் அதிபர் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ். இவர் சமீபத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து பேசினார். அதன்பின்பே, ஐ.ஜே.கே.,வில் இருந்து விலகு வதாக அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us