/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்பேட்டை சாலையை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்தம்
/
தொழிற்பேட்டை சாலையை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்தம்
தொழிற்பேட்டை சாலையை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்தம்
தொழிற்பேட்டை சாலையை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்தம்
ADDED : மார் 18, 2025 04:35 AM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சாலையை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக நிறுத்தப்படும் லாரிகளால் மற்ற வாகனங்களில் செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் 110 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்பேட்டைக்குள் பஸ்கள், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கனரக வாகனங்கள் உட்புற சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக பார்க்கிங் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பஸ், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் தட்டாஞ்சாவடி நுழைவு வாயில் துவங்கி தொழிற்பேட்டையின் அனைத்து குறுக்கு சாலைகளையும் ஆக்கிரமித்து மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டு வருகிறது.
தட்டாஞ்சாவடி தொழிற்சாலைக்கு பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் உடனடியாக சரக்குகளை இறக்கிவிட்டு சென்றுவிட வேண்டும். தொழிற்பேட்டைக்குள் நாள் கணக்கில் நிறுத்த அனுமதி இல்லை.
ஆனால், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை ராணி கிரேன் அலுவலகம் எதிரே தொழிற்பேட்டையின் பிரதான சாலையின் ஒரு பகுதியை அடைத்து கொண்டு நேற்று கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட மூன்று லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால், அவ்வழியாக பைக்குகள், கார்கள் கூட செல்ல முடியவில்லை. தொழிற்சாலைக்கு வரும் வாகனங்களும் சரக்குகளை இறக்க முடியவில்லை. சட்ட விரோதமாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ள லாரிகள் மீது அபராதம் விதித்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இதனை கட்டுப்படுத்த வேண்டிய போக்குவரத்து துறை தடையை மீறும் வாகனங்கள் மீது எந்த நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் துணிச்சலாக தொழிற்பேட்டை வளாகத்தினை வாகனங்கள் பார்க்கிங் ஏரியாவாக மாற்றி அடவாடி செய்து வருகின்றனர்.
நகர பகுதியில் ஏற்பட்ட கடுமையான நெரிசலை கட்டுப்படுத்த மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் மட்டுமே வெளியூர் லாரிகள், பஸ்கள் நிறுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகையால், போக்குவரத்திற்கு இடையூறாக தொழிற்பேட்டையின் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகளில் பார்க்கிங் செய்யும் வாகனங்கள் மீது போக்குவரத்து துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.