/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறையில் நஷ்டமா? அ.தி.மு.க., அன்பழகன் ஆவேசம்
/
மின்துறையில் நஷ்டமா? அ.தி.மு.க., அன்பழகன் ஆவேசம்
ADDED : நவ 21, 2024 05:47 AM
புதுச்சேரி: மின்துறைநஷ்டத்தில் இயங்குவதாக அமைச்சர் கூறுவது கேலிக்கூத்தானது என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:மத்திய மின்துறை இணை அமைச்சர் புதுச்சேரிக்கு வந்த போது, ஆளும் பா.ஜ., கூட்டணி அரசு, மின்துறையை அரசே நடத்தலாம் என, அவரிடம் எடுத்துரைக்கவில்லை.மாறாக மின்துறை அமைச்சர் பல்வேறு சொதப்பல் காரணங்களை கூறி, தனியார் மயமாக்குதலை நியாயப்படுத்தினார்.
இது தொடர்பாக நிருபர்கள் கேட்டபோது, 'வழக்கு கோர்ட்டில் இருக்கும் போது, கருத்துக்கூற முடியாது என்றார். ஆனால், வழக்கு கோர்ட்டில் இருக்கும் போதே, இதேஅமைச்சர் சட்டசபையில், மின்துறை தனியார்மயமாக்கப்படாது என, பதில் அளித்து ஏன்.
மனசாட்சி உள்ள எந்த அரசும் செய்ய துணியாத ஒரு செயலை ஆளும் பா.ஜ., கூட்டணி அரசு செய்கிறது. மின்துறை என்பது மாநில மக்களின் சொத்து. அந்த சொத்தை தனியாருக்கு விற்பதற்கு இதுவரை மக்களிடம் கருத்து கேட்கவில்லை.
கடந்தாண்டு மின்துறையில் ரூ.25 கோடி லாபம் என மின்துறை அமைச்சர் தெரிவித்தார். தற்போது ரூ.300 கோடி நஷ்டம் என வாய் கூசாமல் பொய் பேசி, மின்துறையை தனியார் மயமாக்கப்போகிறோம் என சூசகமாக கூறுகிறார்.புதுச்சேரி மின்மிகை மாநிலம். நம்முடைய தேவைக்கு மேல் உபரியாக உள்ள மின்சாரம் அண்டை மாநில தனியாருக்கு லாபத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மின்துறையில் நஷ்டம் என அமைச்சர் கூறுவது கேலிக்கூத்தானது. இவ்வாறு அவர் கூறினார்.

