தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூ.புதுக்குப்பம் மீன்பிடி துறைமுக திட்டம்: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி செயல்படுத்த கோரிக்கை

 மூ.புதுக்குப்பம் மீன்பிடி துறைமுக திட்டம்: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி செயல்படுத்த கோரிக்கை

 மூ.புதுக்குப்பம் மீன்பிடி துறைமுக திட்டம்: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி செயல்படுத்த கோரிக்கை


ADDED : ஜன 17, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: மூ.புதுக்குப்பம் கிராமத்தில், கிடப்பில் உள்ள மீன்பிடி துறைமுக திட்டத்தை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி செயல்படுத்திட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாகூர் தொகுதி, மூ.புதுக்குப்பம் கடற்கரை கிராமத்தில் கடந்த 2009ம் ஆண்டு ரூ. 10 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் திட்டம் துவங்கப்பட்டது. முதற்கட்டமாக, முகத்துவராப் பகுதியில் 100 மீட்டர் நீளத்திற்கு படகு நிறுத்தும் தளம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டம் செயல்படுத்தினால் கடல் நீர் உட்புகுந்து விளை நிலங்கள் பாதிக்கப்படும் என விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக, உரிய ஆய்வு மேற்கொள்ளாமல் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த 15 ஆண்டிற்கு மேலாக கிடப்பில் போட்டுள்ள இத்திட்டத்தை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி, 75வது சுதந்திர தினத்தையொட்டி, மணப்பட்டு கிராமத்தில் வனத்துறை சார்பில் நடந்த 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்று பேசிய, முதல்வர் ரங்கசாமி, கிடப்பில் உள்ள மூ.புதுக்குப்பம் மீன்பிடி துறைமுக திட்ட பணியை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்படுத்துவது குறித்து, அரசாங்கம் கவனத்தில் எடுத்து கொள்ளும் என்றார்.

பின்னர், எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் அடுத்த சில மாதங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மூ. புதுக்குப்பம் முகத்துவார பகுதி உடைப்பு ஏற்பட்டு, அதன் வழியாக வெள்ள நீர் கடலில் கலந்தது.

நீர்வழி பாதை கிடைத்ததால், மூ.புதுக்குப்பம் கிராம மீனவர்கள் ஏற்கனவே அங்கு அமைத்திருந்த படகு நிறுத்த தளத்தில், படகுகளை நிறுத்தி வைத்து, அங்கேயே மீன்கள் ஏலம் விடும் பணியை துவங்கினர்.

ஆனால், அடுத்த சில மாதங்களில் முகத்துவாரம் மணலால் துார்ந்துபோனதால், படகு போக்குவரத்திற்கான நீர்வழி பாதை தடைபட்டது. இதனால், மீண்டும் மீனவர்கள் தங்களது படகுகளை கடற்கரை மணல் பரபரப்பிலேயே நிறுத்தி வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டிற்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள இத்திட்டத்தை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து, மீன்வளத்துறை மூலமாக சென்னை ஐ.ஐ.டி., நிபுணர் குழுவினர், 6 மாதங்களுக்கு முன்பு மூ.புதுக்குப்பம் மீன்பிடி துறைமுக திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் சாதக, பாதகம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடல்நீர், நிலத்தடி நீர், மண் ஆகிய மாதிரிகளை சேகரித்து சென்றனர்.

ஆனால், ஆய்வு அறிக்கை குறித்து எந்த விபரங்களும் வெளியாகவில்லை என மீனவர்கள் கூறுகின்றனர்.

எனவே, மூ.புதுக்குப்பம் கிராமத்தில், கிடப்பில் போடப்பட்டுள்ள மீன்பிடி துறைமுக திட்டத்தை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி செயல்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us