ADDED : மார் 23, 2026 08:19 PM

திருக்கனுார்: வாதானுார் சத்தியபாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த வாதானுாரில் சத்தியபாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி, லஷ்மி நரசிம்மர், லஷ்மி ஹயக்ரீவர், ஆண்டாள், கெருடாழ்வார், ராமானுஜர், பக்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நாளை (25 ம் தேதி) காலை 9 மணி முதல் 10:30 மணி வரை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதையொட்டி நேற்று விஸ்வக்ஸேன ஆராதனம், புண்ணியாகவாஜனம், மகா சுதர்சன ஹோமம், லஷ்மி ஹோமம், சாந்தி ஹோமம், பூர்ணாஹூதி, அங்குரார்ப்பணம், வேத பிரபந்த தொடக்கம், மாலை வாஸ்து சாந்தி ஹோமம், அக்னி பிரதிஷ்டை ஹோமம், கலாகர்ஷனம், ரக்ஷாபந்தனம், ஆராதனம், நித்ய ஹோமம், இரவு முதல் கால பூர்ணாஹூதி சாற்றுமுறை நடந்தது.
இன்று 24ம் தேதி காலை 7 மணிக்கு நித்ய அக்னி ஆராதனம், காயத்ரி மூலமந்திர ஹோமம், இரண்டாம் கால பூர்ணாஹூதி சாற்றுமுறை, மாலை 4:30 மணிக்கு மகா சாந்தி ஹோமம், மகா சாந்தி திருமஞ்சனம், மூல மந்திர ஹோமம், இரவு 10 மணிக்கு மூன்றாம் கால பூர்ணாஹூதி சாற்றுமுறை நடக்கிறது.
நாளை 25ம் தேதி காலை 6:30 மணிக்கு கோ பூஜை, நித்ய ஹோமம், யாத்ராதானம், கடம் புறப்பாடு, காலை 10:30 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம், விசேஷ திருவாதாரனம், ஆசிர்வாதம், பிரபந்த இதிகாச வேத சாற்றுமுறை, மாலை 6 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம், இரவு சுவாமி வீதிவுலா நடக்கிறது.
