ADDED : பிப் 17, 2026 05:48 AM

பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
இதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு, முதல் கால பூஜையுடன் மகா சிவராத்திரி விழா துவங்கியது. தொடர்ந்து, 7.30 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, 11.30 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, நள்ளிரவு 1.30 மணிக்கு நான்காம் கால பூஜையும், நேற்று (16ம் தேதி) அதிகாலை 3.00 மணிக்கு ஐந்தாம் கால பூஜையும் நடந்தது.
தொடர்ந்து, அதிகாலை 5.30 மணிக்கு ஆறாம் கால பூஜையும் மகா தீபாரனையும் நடந்தது. ஒவ்வொரு கால பூஜையின் போதும், ஏகாதெச ருத்ரா பாராயணம் தொடர்ச்சியாக நடைபெற்றது. 6ம் கால பூஜையை தொடர்ந்து, அதிகார நந்தியில், சந்திரசேகரர், மனோன்மணியம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு கோபுர தரிசன காட்சியளித்து, வீதியுலா சென்று அருள் பாளித்தனர். விழாவில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
விழாவில், புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலநாதரையும், வேதாம்பிகையம்மனையும் தரிசனம் செய்து விட்டு சென்றனர். திருச்சோபனமுடையார் லிங்கத்தையும், பக்தர்கள் வலம் வந்து வழிபட்டனர்.
ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சாரியார்கள் சங்கர நாராயணன், பாபு, கிராம மக்கள் செய்திருந்தனர்.
