ஆன்லைனில் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் ஆர்டர் செய்த நபரிடம் ரூ.5 லட்சம் மோசடி
ஆன்லைனில் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் ஆர்டர் செய்த நபரிடம் ரூ.5 லட்சம் மோசடி
ADDED : மார் 16, 2026 04:30 AM
புதுச்சேரி: ஆன்லைனில் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் ஆர்டர் செய்து புதுச்சேரி நபர் மோசடி கும்பலிடம் ரூ. 5 லட்சம் இழந்துள்ளார்.
புதுச்சேரி, குரும்பாபேட்டையை சேர்ந்தவர், ஆன்லைனில் வந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் விற்பனை தொடர்பான விளம்பரத்தை பார்த்து, ஆர்டர் செய்துள்ளார்.
இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட மர்மநபர், மூலப்பொருட்கள் ஆர்டர் செய்த நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி மூலப்பொருட்களை அனுப்புவதற்கு முன்பணம் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து, இரண்டு தவணைகளாக ரூ. 5 லட்சம் மர்மநபருக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால், ஆர்டர் செய்த பொருட்கள் ஏதுவும் வரவில்லை. மேலும், அந்த நபரையும் மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
நெல்லித்தோப்பைச் சேர்ந்த பெண்ணை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், போலீஸ் அதிகாரி போல் பேசி, அந்த பெண்ணின் தங்கையை குற்ற வழக்கில் சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் பணம் அனுப்பும்படி தெரிவித்தார். அதைநம்பி, மர்மநபருக்கு ரூ. 35 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.
இதேபோல், தவளக்குப்பத்தை சேர்ந்தவர் 43 ஆயிரத்து 980, தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் 45 ஆயிரம், வில்லியனுாரை சேர்ந்த பெண் 8 ஆயிரத்து 496 என 5 பேர் மோசடி கும்பலிடம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 476 ரூபாய் ஏமாந்துள்ளனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
