ADDED : ஜூலை 17, 2025 06:37 AM

புதுச்சேரி : இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு, டாக்டர்களுக்கான தொடர் மருத்துவக் கருத்தரங்கு நடந்தது.
சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் தலைமை தாங்கி, கருத்தரங்கை துவக்கி வைத்தார். கருத்தரங்கில், ஜிப்மர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் ரவிக்குமார் சித்தோரியா 'சர்க்கரை நோயினால் காலில் ஏற்படும் ஆறாத புண்களுக்கான நவீன சிகிச்சைகள்' பிம்ஸ் மருத்துவமனை டாக்டர் லிங்கம் 'முகத்தில் ஏற்படும் எலும்பு முறிவு மற்றும் தசை சிதைவுக்கான மறுசீரமைப்பு சிகிச்சை', மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர் வைத்தீஸ்வரன் அரிகிருஷ்ணன் 'பிளாஸ்டிக் சர்ஜரியில் நவீன சிகிச்சை முறைகள்', அரசு பொது மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ரகுவீர் 'தலை முதல் கால் வரை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் பயன்பாடுகள்' குறித்தும் பேசினர்.
பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி குணேஸ்வரி, குறை தீர்ப்பு அதிகாரி ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.