ADDED : ஆக 15, 2026 05:51 PM
புதுச்சேரி: முதுநிலை மருத்துவ மாணவரிடம் ரூ.1.14 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, அவ்வை நகர், 28வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரஜத் ரமேஷ் கட்கர், 27; முதுநிலை மருத்துவ மாணவர். இவர் தனது மருத்துவ படிப்பு தொடர்பாக ஆன்லைனில் சில ஆவணங்களை தேடியுள்ளார். அது தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த மொபைல் எண்ணை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டார்.
அப்போது, எதிர்முனையில் பேசிய மர்மநபர் அவர் தேடிய மருத்துவ படிப்பு தொடர்பான ஆவணங்கள் மற்றும் மின்னணு பதிவுகளைக் காட்டியுள்ளார். அதை உண்மை என நம்பிய ரஜத் ரமேஷ், ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 500 செலுத்தி ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆர்டர் செய்த பொருள் எதுவும் அவருக்கு வரவில்லை. அதன்பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
அவரது புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
