ஓட்டு எண்ணிக்கைக்கு 'மெகா பிளான்'.. தயார்:. மின்னல் வேக முடிவுக்கு தேர்தல் துறை ஏற்பாடு
ஓட்டு எண்ணிக்கைக்கு 'மெகா பிளான்'.. தயார்:. மின்னல் வேக முடிவுக்கு தேர்தல் துறை ஏற்பாடு
ADDED : மே 02, 2026 01:37 AM

புதுச்சேரி:ஓட்டு எண்ணிக்கை விரைவாக நடைபெற, அதிக ஓட்டுச்சாவடிகள் கொண்ட தொகுதிகளுக்கு கூடுதல் மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை பணியில் 850க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். புதுச்சேரி சட்டசபையில் உள்ள 30 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் 4ம் தேதி நடக்கிறது. இதற்காக 17 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் ஓட்டு மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் மின்னணு ஓட்டு இயந்திரம் மற்றும் தபால் ஓட்டுகள் என இரு பிரிவுகளாக ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக ஓட்டு எண்ணும் மையங்களில், மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களுக்கு 166 டேபிள்கள், தபால் ஓட்டுகளுக்கு 35 என ஒட்டுமொத்தமாக 201 டேபிள்கள் ஏற் படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதிகபட்ச மேஜைகள் ஓட்டு எண்ணிக்கை விரைவாக நடைபெற, அதிக ஓட்டுச்சாவடிகள் கொண்ட தொகுதிகளுக்கு கூடுதல் மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மின்னணு ஓட்டுபதிவு இயந்திரத்தினை பொருத்தவரை நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, தெற்கு மற்றும் நிரவி, டி.ஆர் பட்டினம் ஆகிய காரைக்கால் பகுதி தொகுதிகளில் தலா 14 மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தபால் ஓட்டுகளை பொருத்தவரை வில்லியனுார், உழவர்கரை, கதிர்காமம், இந்திரா நகர், நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை மற்றும் அரியாங்குப்பம், மணவெளி ஆகிய தொகுதிகளில் தலா 3 மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்ச மேஜைகள் குறைவான வாக்காளர்கள் அல்லது ஓட்டுசாவடிகள் கொண்ட பகுதிகளுக்கு மேஜைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பொருத்தவரை லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன்பேட்டை மற்றும் நெட்டப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் தலா 7 மேஜைகள் மட்டுமே ஓட்டுகள் எண்ண போடப்பட்டுள்ளது.
தபால் ஓட்டுகளை பொருத்தவரை உப்பளம், உருளையன்பேட்டை, மாகி மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் தலா 1 மேஜை மட்டுமே ஓட்டு எண்ணிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
சமமான மேஜைகள் பல தொகுதிகள் ஒரே அளவிலான மேஜை ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளன. ஆர்.ஓ.-1, 2, 3, 4, 5, 11 மற்றும் 17 ஆகிய 7 தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தலா 10 மேஜைகள் உள்ளன. தபால் ஓட்டுகளை பொருத்தவரை ஆர்.ஓ.-1, 2, 5, 6, 7, 11, 12, 13, 14,15 ஆகிய தேர்தல் நடத் தும் அதிகாரிகளுக்கு சமமாக 2 ஓட்டு எண்ணிக்கை மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏற்பாடுகள் ஜோர் ஒவ்வொரு எண்ணிக்கை மேஜையிலும் கவுண்டிங் சூப்பர்வைசர், கவுண்டிங் அசிஸ்டண்ட், மைக்ரோ அப்சர்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மின்னணு ஓட்டு எண்ணிக்கைப் பிரிவில் மொத்தம் 166 மேஜைகளுக்கு 218 மேற்பார்வையாளர்களும், 232 நுண்ணாய்வு அலுவலர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தபால் ஓட்டுகளைப் பொறுத்தவரை, கவுண்டிங் அசிஸ்டண்ட் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது.
மொத்தம் 35 தபால் ஓட்டு மேஜைகளுக்கு 94 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு மேஜைக்கு சராசரியாக இருவர் அல்லது அதற்கு மேற்பட்ட உதவியாளர்கள் பணியாற்ற உள்ளனர்.
201 ஓட்டு எண்ணிக்கை மேஜைகள் அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஒட்டுமொத்தப் பணியில் 850-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேரடியாகப் ஈடுபட உள்ளனர். ஏனாம் மற்றும் மாகே போன்ற தொகுதிகளில், தபால் வாக்குகளை விட மின்னணு இயந்திரங்களின் எண்ணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் பகுதியானது அதிகபட்ச மேஜை எண்ணிக்கையைக் கொண்டுள்ளதால், அங்கு ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் மற்ற தொகுதிகளுக்கு இணையான வேகத்தில் வெளிவர வாய்ப்புள்ளது.
