புதுச்சேரி, தைவான் பல்கலை.,கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுச்சேரி, தைவான் பல்கலை.,கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஏப் 10, 2026 07:50 PM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம், தைவானின் மிங் சி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கும் இடையே, சர்வதேச கல்வி ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி் சிறப்பை வளர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தைவானின் மிங் சி தொழில்நுட்ப பல்கலைக்கழக நுண்ணறிவு மருத்துவ சாதனங்களுக்கான ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் துணை இயக்குநர் பின் யி சென், தலைவர் மணி கோவிந்தசாமி ஆகியோர் அடங்கிய குழுவினரால், புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபுவிடம் ஒப்பந்தம் ஒப்படைக்கப்பட்டது. இதனை, மதன்ஜீத் பசுமை ஆற்றல் தொழில்நுட்பப் பள்ளியின் பசுமை ஆற்றல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ஏழுமலை ஒருங்கிணைத்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பிரகாஷ்பாபு பேசுகையில், 'உலகளாவிய ஈடுபாட்டை மேம்படுத்துதல் மற்றும் பல்துறை ஆராய்ச்சியை வலுப்படுத்துதல் ஆகிய பல்கலைக்கழகத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது' என்றார்.
தைவான் அனுபவக் கல்வித் திட்டம் மற்றும் தைவான் சர்வதேசப் பயிற்சித் திட்டம் ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உள்ளகப் பயிற்சிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
பசுமை ஆற்றல், நானோ தொழில்நுட்பம் மற்றும் வேதியியல் துறைகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலைப் பட்ட மாணவர்கள், தைவானில் கல்வி உதவித்தொகையுடன் இரண்டாம் ஆண்டு முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ள வழிவகை செய்கிறது. கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், மற்றும் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் துறைகளில் கல்வி வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வதை ஊக்குவிக்க முடியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
