/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜிவ் சிக்னல் - மரப்பாலம் மேம்பால திட்டத்தில் மாற்றம் அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்
/
ராஜிவ் சிக்னல் - மரப்பாலம் மேம்பால திட்டத்தில் மாற்றம் அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்
ராஜிவ் சிக்னல் - மரப்பாலம் மேம்பால திட்டத்தில் மாற்றம் அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்
ராஜிவ் சிக்னல் - மரப்பாலம் மேம்பால திட்டத்தில் மாற்றம் அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்
ADDED : நவ 30, 2024 06:38 AM
புதுச்சேரி : ராஜிவ் சிக்னல் மூலம் மரப்பாலம் வரையிலான மேம்பால வரைப்படத்தில் சில மாற்றம் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், புதுச்சேரியின் தொழில்துறை கண்காட்சி இண்டெக்ஸ் 2024, சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நேற்று துவங்கியது.
புதுச்சேரியின் உற்பத்தி திறன்களை காண்பிக்கும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
கண்காட்சியை அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார். தொழில்துறை இயக்குநர் ருத்ரகவுடு, சி.ஐ.ஐ., புதுச்சேரி கிளை தலைவர் சண்முகானந்தம், துணை தலைவர் ஷமீர் காம்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, சன்வே ஓட்டலில் நடந்த துவக்க நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது;
எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தங்கள் தொடர்பான மசோதா தயாரித்து, அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டு சட்டமாக்க மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். இதன் மூலம் தொழில் முனைவோர் தொழில் தொடங்க காத்திருக்க வேண்டியது இல்லை. வரும் பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது.
தொழில் தொடங்க வங்கி கடனுதவிக்காக மத்திய அரசிடம் பேசினோம். மத்திய நிதி அமைச்சர் புதுச்சேரி வருகையின்போது தொழில் தொடங்க வங்கிகள் மூலம் ரூ. 21 ஆயிரம் கோடி கடன் தரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஐ.டி., நிறுவனங்கள் 160 உள்ளது. சிறு ஐ.டி., நிறுவனங்கள் செயல்பட அரசின் இடங்களை தர திட்டமிட்டுள்ளது.
இதற்காக புதுச்சேரி அரசில் பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள் கணக்கெடுப்பு நடக்கிறது. இந்த இடங்களை ஐ.டி., நிறுவனங்கள் பணியாற்ற தந்தால் வேலைவாய்ப்பும் பெருகும். அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
புதுச்சேரிக்கு வரும் 2030ல் சுற்றுலா வருவோர் எண்ணிக்கை 30 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கிறோம். ராஜிவ் சிக்னலில் இருந்து மரப்பாலம் வரை மேம்பாலம் அமைக்க வரைபடத்தில் சில மாற்றம் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். விரைவில் இப்பணியும் துவங்கும். கடலுார் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. இதன் மூலம் நெரிசல் இன்றி விழுப்புரம் செல்ல முடியும் என, கூறினார்.