அமைச்சர் நமச்சிவாயத்திற்கு பாதுகாப்பு வாகனங்கள் திடீர் 'வாபஸ்'
அமைச்சர் நமச்சிவாயத்திற்கு பாதுகாப்பு வாகனங்கள் திடீர் 'வாபஸ்'
ADDED : ஜூன் 10, 2026 04:32 AM
புதுச்சேரி: இலாகா ஒதுக்கீடு இன்றி அமைச்சர் நமச்சிவாயம் பயன்படுத்தி வந்த பாதுகாப்பு வாகனங்கள் நேற்று முன்தினம் அதிரடியாக திரும்ப பெறப்பட்டது.
புதுச்சேரியில் கவர்னர் மற்றும் முதல்வரின் வாகனங்களுக்கு மட்டுமே போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் பின் தொடர்ந்து செல்லும். இந்நிலையில் கடந்த ஆட்சியில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நமச்சிவாயம், தனது வாகனத்திற்கு முன்பும், பின்பும் போலீஸ் பாதுகாப்பு வாகனங்களோடு பயணம் செய்து வந்தார். அதுவும் எந்த நேரமும் 'சைரன்' ஒலிக்கவிட்டபடியே செல்வது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கடந்த மார்ச் 16ம் தேதி சட்டசபை தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் பயன்படுத்திய போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் யிட்ட நமச்சிவாயம் வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த மாதம் 13ம் தேதி முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சராக பதவியேற்றார்.
இருப்பினும் அவருக்கு இலாகா எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இருப்பினும், அவரது காரில் 'ேஹாம் மினிஸ்டர்' என்ற பெயர் பலகை வைத்துக் கொண்டு கடந்த ஆட்சியில் இருந்ததை போன்று தனது காருக்கு முன்பும், பின்பும் போலீஸ் பாதுகாப்பு வாகனங்களுடன் வலம் வந்து கொண்டிருந்தார்.
இலாகா ஒதுக்கீடு செய்யாத நிலையில், அவரே 'ேஹாம் மினிஸ்டர்' என்ற பெயர் பலகையுடன் உலா வந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் திடீரென திரும்ப பெறப்பட்டன.
அவர் அமைச்சராக பொறுப்பேற்று 27 நாட்களாக பயன்படுத்தி வந்த போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் திடீரென திரும்ப பெறப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகி உள்ளது.
