/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை குறித்த வதந்திக்கு அமைச்சர்... முற்றுப்புள்ளி; அரசின் கட்டுட்பாட்டில் தான் உள்ளது என உறுதி
/
மின்துறை குறித்த வதந்திக்கு அமைச்சர்... முற்றுப்புள்ளி; அரசின் கட்டுட்பாட்டில் தான் உள்ளது என உறுதி
மின்துறை குறித்த வதந்திக்கு அமைச்சர்... முற்றுப்புள்ளி; அரசின் கட்டுட்பாட்டில் தான் உள்ளது என உறுதி
மின்துறை குறித்த வதந்திக்கு அமைச்சர்... முற்றுப்புள்ளி; அரசின் கட்டுட்பாட்டில் தான் உள்ளது என உறுதி
ADDED : ஆக 30, 2025 07:00 AM

புதுச்சேரி: மின்துறையை தனியார் மயமாக்க டெண்டரும் கோரவில்லை, தனியாருக்கும் கொடுக்கவில்லை என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மின் துறையை தனியார்மயமாக்க அரசு முயற்சி கடந்த 2022ம் ஆண்டு டெண்டர் விடுத்தது.இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மின் துறை தொழிலாளர்கள் போராட்ட குழுவினை ஏற்படுத்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் மின் துறை தனியார்மயமாக்கவிடப்பட்ட டெண்டரை திறக்க கூடாது என்று 16.11.2022 அன்று உத்தரவிட்டது. எனவே அந்த டெண்டர் திறக்கப்படாமல் இதுவரை 26 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் குஜராத்தில் அதானி எலெக்ட்ரிக்சிட்டி புதுச்சேரி லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்கில் பரவியது.
இது புதுச்சேரியில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதானிக்கு மின் துறை விற்றுவிட்டதாக எதிர்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இதனை மறுத்த அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:
புதுச்சேரி மின்துறையானது அதானி குழுமத்திற்கு டெண்டர் விடப்பட்டதாக செய்திகள் வந்துள்ளது. புதுச்சேரி மாநில அரசை பொறுத்தவரை இதுவரையிலும் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு, எந்தவித ஒப்பந்த புள்ளியும் கோரவில்லை. தனியாருக்கு மின்துறை கொடுக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக மக்களுக்கும், மின்துறை ஊழியர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
நீண்ட நாட்களுக்கு முன்பாக கொள்கை முடிவு காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியார் மயமாக்கப்பட வேண்டும் என்று நிலைமை இருந்தது. அப்போது, மின்துறை ஊழியர்கள், அரசியல் கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மின்துறை தனியார் மயமாக்க விடமாட்டோம் என, எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின், முதல்வர் தலைமையில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், 51 சதவீதம் அரசும், 49 சதவீதம் பங்குகளை தனியாருக்கு விற்கலாம் என, முடிவெடுக்கப்பட்டது.
இருப்பினும், தொழிற்சங்கத்தினர் நீதிமன்றத்தை அணுகி மின்துறையை தனியார் மயமாக்க கூடாது என்று வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கு இன்று வரையில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அப்படி இருக்கும் பட்சத்தில் அரசு எந்தவொரு நிறுவனத்திற்கும், எந்தவொரு தனியாருக்கும் மின்துறையை கொடுக்கவில்லை. மின்துறை முழுவதுமாக புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது.
இதுபோன்ற தவறான செய்திகளை வைத்து பொதுமக்களும், மின்துறை ஊழியர்களும் எதிர்வினையாற்ற வேண்டாம். அதானி குழுமம் 'அதானி எனர்ஜி சொல்யூஷன்' என்ற பெயரில் புதுச்சேரி மின்துறையை கைப்பற்றியதாக கூறியிருந்தால் அதன் மீது சட்டத்துறையுடன் கலந்து பேசி சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அது கண்டிப்பாக எடுக்கப்படும்.
சமூக வலைதளத்தில் வரும் செய்திகள் அனைத்தும் உண்மையில்லை. அதனை கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது. அரசு சார்பாக அது போன்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுபோன்ற ஒரு நிகழ்வே நடக்கவில்லை. சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவி வருவது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்துவது அரசின் கடமையாகும். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், தீர்ப்பை பொறுத்த அரசின் முடிவு இருக்கும். சோலார் மற்றும் மின்துறை தொடர்பாக எந்தவித விண்ணப்பங்களை அதானி குழுமம் இதுவரையில் அரசுக்கு கொடுக்கவில்லை.
தற்போது அரசு 73 இளநிலை பொறியாளர்களை புதிதாக தேர்வு செய்து, நியமித்துள்ளது. 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு மிக விரைவில் நோட்டீஸ் வெளியிட உள்ளோம். தனியார் மயமாக்கும் சூழல் இருக்கிறது என்றால், எதற்காக புதிதாக ஆட்கள் சேர்க்கும் பணியினை செய்ய போகிறோம்.
பலருக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளோம். அப்படி இருக்கும் போது அரசு எதற்கு இந்த வேலைகளை செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

